திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தில் சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வடம்பிடித்து இழுந்தனர்.


நெல்லையப்பர் கோயில் திருவிழா:


 திருநெல்வேலி மாவட்டத்தில் டவுன் பகுதியில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில், தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் முக்கியமான ஒன்றாகும். பத்து நாட்கள் நடைபெறும் இந்தக் கோயிலின் ஆணி பெருந்திருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.


அதைத்தொடர்ந்து காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ஆகியோர் பஞ்சமூர்த்திகளுடன் சேர்ந்து பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவையொட்டி, நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில், பக்தி இன்னிசை, நாட்டியம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் மற்றும் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.


தேரோட்டம்:


திருவிழாவின் 9வது நாளில்,  சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெறும் தேரோட்டத்தை காண கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.  சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் தேரோட்டத்தில் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.


ஆடி, அசைந்து செல்லும் தேர்:


அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து கோயில் வளாகத்தில் குவிந்த்ருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் தேரை வடம்பிடித்து இழுத்துச் செல்கின்றனர். அப்போது, அரகரமகாதேவா ஓம் நமச்சிவாய என பக்தர்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணை முட்டின.


நெல்லையப்பா் தேர் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட மிகப் பெரிய தேராகவும் தமிழகத்தில் மிகவும் உயரம் கொண்ட 3 வது தேர் என்ற பெருமையும் கொண்டதாகும்.  அத்தகைய பிரமாண்ட தேர் மலர்களாலும், வண்ண கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டு முழுக்க முழுக்க மனித சக்தியால் மட்டுமே இழுக்கப்பட்டு, நான்கு மாட வீதிகளில் ஆடி, அசைந்து ஊர்வலமாக வந்து கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.  நெல்லையப்பர் தேர் 450 டன் எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:


தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில், உதவி காவல் ஆணையர்கள், காவல் ஆய்வாளரக்ள் உள்ளிட்ட சுமார் 1,000 காவல்துறையினர் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனித் தேரோட்டத்தையொட்டி கோயில் பகுதிகளில் கூடுதலாக 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக நெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.