நெல்லை பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ். வயது 43. இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் மீது வந்த ஊழல் புகார் காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முன்னதாக, இவர் நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளராக பணியாற்றி வந்தார். அப்போது முறைகேடாக பணம் சம்பாதித்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு புகார்கள் இவர் மீது எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த நான்காம் தேதி வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் முருகேஷின் நெல்லை வீட்டில் ஆய்வாளர் ராபின் ஞானசேகர் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். காலை 7 மணி அளவில் வீட்டினுள் சென்று வீட்டின் கதவினை போலீசார் பூட்டினர். அப்போது வீட்டில் இருந்த முருகேஷின் மனைவி, மற்றும் 2 மகள்களிடம் விசாரணை நடத்தியதோடு அவர்களது செல்போனையும் வாங்கி சுவிட்ச் ஆப் செய்தனர். பின் வீட்டின் பல்வேறு அறைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே வராமலும், வீட்டிற்குள் யாரும் அனுமதிக்கப்படாமலும் சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக முருகேஷ் தனது பெயரிலும், தனது மனைவி சசிகலா பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது ஆவணங்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர சில பினாமி பெயரிலும் முருகேஷ் நெல்லை மாநகரின் முக்கிய பகுதிகளில் சொத்துகள் வாங்கியதாக தெரிகிறது. விஎம் சத்திரம், கேடிசி போன்ற பகுதிகளில் பல கோடி மதிப்புள்ள நிலம் வாங்கி கட்டிடங்கள் கட்டியிருப்பதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் போலீசார் கையில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாள் சோதனையில் முருகேஷ் வீட்டில் இருந்து 128 சொத்து ஆவணங்களும், அலுவலகத்தில் 93 சொத்து ஆவணங்களும் என மொத்தம் 221 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர் விசாரணையில் அடுக்கடுக்காக கிடைத்த ஆவணங்களை கண்டு அதிகாரிகளே மிரண்டு போயுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தவிர வீட்டில் இருந்த ஒரு லட்சத்து எழுபத்தி ஏழாயிரத்து நூறு ரூபாய்( 1,77,100) ரொக்க பணமும் சிக்கியதாக தெரிகிறது. மேலும் வெளியூரில் இருக்கும் முருகேஷை வரவழைத்து அவரிடம் மேற்கண்ட சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நெல்லையில் அரசு தொழில் மைய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு சிக்கிய ஆவணங்கள் அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..