நெல்லை மாவட்டம் வி எம் சத்திரத்தை அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்ற கார் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 15 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். வழக்கு விசாரணை நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பத்மநாபன் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 15 நபர்களில் மூன்று பேர் உயிரிழந்து விட்ட நிலையில் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் தண்டனை:
ராமையன்பட்டியை சேர்ந்த சிவா என்ற சிவலிங்கம், பானாங்குளத்தைச் சேர்ந்த தங்கவேல், ராமையன்பட்டியைச் சார்ந்த லட்சுமணன் ஆகிய மூன்று பேர் சம்பவத்தில் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளனர் எனக்கூறி அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ஏனைய 9 பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் நீதிமன்ற உத்தரவு படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கு பிண்ணனி:
மாஞ்சோலை தோட்ட மேலாளர் அந்தோணி முத்து என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கிருஷ்ணசாமி உள்பட 11 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார் கிருஷ்ணசாமி. ஆரோக்கியநாதபுரம் என்ற இடத்தில் அவரது கார் சென்று கொண்டிருந்தபோது மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் கார் மீது வெடிகுண்டை வீசினர். அவரைத் தொடர்ந்து மேலும் மூன்று பைக்குகளில் வந்தவர்கள் 3 குண்டுகளை கார் மீது வீசினர்.
இதில் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. குண்டுகள் வெடித்ததில் கிருஷ்ணசாமியின் முகம், தொடையில் காயம் ஏற்பட்டது. அவரது கட்சியின் இரு நிர்வாகிகளும் படுகாயமடைந்தனர். கிருஷ்ணசாமியின் காருக்கு பின்னால் வந்த அவரது கட்சியினரின் கார்கள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. நிலைமை விபரீதமாகவதற்குள், காரை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு சென்றதால் அனைவரும் தப்பினர். இந்தக் கார்களைத் தொடர்ந்து பைக்குகளில் வந்த புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள், வெடிகுண்டுகளை வீசியவர்களை விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்களிடம் குண்டு வீசிய 9 பேர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ராமையன்பட்டி பஞ்சாயத்துத் தலைவரை கொன்றவர்களுக்கு கிருஷ்ணசாமி அடைக்கலம் தந்ததாகவும், அதனால் அவரைப் பழி தீர்க்க முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் வெடிகுண்டு சம்பவம் நடைபெற்று 19 ஆண்டுகளுக்கு பின்பு இந்த வழக்கில் இன்று மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.