நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது நம்பி நகர் பகுதி. இந்த பகுதி நாங்குநேரி பேரூராட்சின் 1 வது வார்டாக உள்ளது. மேலும் இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரி பெரிய குளத்தை ஆக்கிரமித்து அந்த பகுதியில் 14 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ள நிலையில் நாங்குநேரி பெரிய குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அளவீடு செய்ய வருவாய் துறையினர் நில அளவையாளர்கள் காவல்துறை உதவியுடன் நம்பி நகர் பகுதிக்கு அதிகாரிகள் வருகை புரிந்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அளவீடு செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் வீடுகளை அளவீடு செய்யக்கூடாது என அப்பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எங்களது வீடுகளை அப்புறப்படுத்தினால் அனைத்து குடும்பங்களுக்கும் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்று தெரிவித்தனர். இச்சூழலில் திடீரென அப்பகுதியைச் சேர்ந்த கணபதி, துரைப்பாண்டியன், மற்றொரு துரைப்பாண்டியன் என மூன்று பேர் அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக வீடுகளை அளவீடு செய்யக்கூடாது. அதிகாரிகள் திரும்பி செல்ல வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களை காவல்துறையினர் கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்து மேலே ஏறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதிக்கு தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டமானது நீடித்தது. இந்த நிலையில் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தற்காலிகமாக அளவீடு செய்வதை நிறுத்துவதாக தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டமானது கைவிடப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரிடம் இப்பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்து அவரின் முடிவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக்கூறி அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். அதன்பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கீழே இறங்கி வந்ததுடன் போராட்டமும் முடிவுக்கு வந்தது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு செல்போன் கோபுரங்களிலும் ஏறி போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.