நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள சத்திரம் குடியிருப்பு பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி இருபாலர் படிக்கும் பள்ளியாக உள்ள நிலையில் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆய்வகங்களும் வகுப்பறைகளாக செயல்படுவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்பறையாக செயல்பட்ட ஆய்வகத்தை மாணவிகள் பூட்டிய போது அங்கிருந்த ஆசிட் பாட்டில் உடைந்து மாணவியின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த மாணவியை சக மாணவிகள் மீட்டு ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்து நெல்லையில் உள்ள தனியார் கண் மருத்துவ மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.  


இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் நலமாக இருக்கிறார்.  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை பாலமுருகன் அளித்த புகாரின் அடிப்படையில் தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் மாணவியின் பெற்றோர் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் பள்ளியில் ஆய்வகத்தில் வைத்து வகுப்பு நடத்தப்பட்டதன் காரணமாகவே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் கவன குறைவும், மெத்தனமான போக்குமே இந்த பிரச்சனைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவியின் பாதிப்பை உணர்ந்து கொள்ளாமல் பணம் கொடுத்து இந்த பிரச்சனையை சரி செய்து முடிக்க முயற்சி எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தார் தலையிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




பள்ளியில் இடப்பற்றாக்குறை காரணமாகவே ஆய்வகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டதனால் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதுடன் 25 லட்சம் ரூபாய் நிவாரணமும் அரசு சார்பில் வழங்க வேண்டும். பள்ளிகளில் மாணவிகளுக்கு இது போன்ற பாதிப்புகளும், பிரச்சனைகளும் ஏற்படாத வண்ணம் கண்காணிப்பு குழுக்களை பள்ளிகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் சிசிடிவி கேமராக்களையும் தேவையான இடங்களில் பொருத்தி பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.




இதுகுறித்து மாணவியின் தாய் கூறும்பொழுது, “மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளோம். பள்ளியிலிருந்து ரூ.10 ஆயிரம் கொடுத்து வைத்துக்கொள்ளுமாறு கொடுத்தனர், வேண்டாம் என்று நாங்கள் கொடுத்துவிட்டோம், ஆட்சியருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை, வகுப்பறையில் இடமின்றி ஆய்வகத்தில் வைத்து நடத்தியதால் மேல் இருந்த ஆசிட் பாட்டில் விழுந்து கண் பாதிக்கப்பட்டுள்ளது.  9 ஆம் வகுப்பு தான் படிக்கிறாள்.  எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.