நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆணைகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவரது உண்மையான பெயர் பால விவேகானந்தன். இவர் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ராக்கெட் வேகத்தில் ஈடுபட்டதால் ராக்கெட் ராஜா என்று அவருடன் உள்ளவர்கள் அவரை அழைக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.  அதன் பின்னர் அரசியல் ஆசை ஏற்படவே இவர் பனக்காட்டுப்படை என்ற கட்சியை தொடங்கினார். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள  நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை 29ஆம் தேதி  நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் என்ற கிராமத்தில் உள்ள சாமித்துரை என்பவர் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவிற்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ராக்கெட் ராஜா தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர், அதன் பின்னர் அவர் வெளி நாட்டிற்கு தப்பி செல்வதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த போது நெல்லை மாவட்ட தனிப்படை போலிசார் அவரை கைது செய்தனர். 


கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டமும் பாய்ந்தது.  தற்பொழுது அவர் ஜாமினில்  வந்துள்ளார். இந்த கொலை வழக்கில் தாழையூத்தை சேர்ந்த ஜேக்கப் என்பவருக்கும் தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 பாளையங்கோட்டை மத்திய சிறையில்  கைதியாக இருந்த முத்து மனோவை (27) ஒரு கும்பல்  சிறைக்குள்ளையே கற்களாலும், கம்பிகளாலும் தாக்கியதில் முத்துமனோ உயிரிழந்தார். இது சம்பந்தமாக சிறையில் இருந்த தாழையூத்தை சேர்ந்த ஜேக்கப்(29),  மாடசாமி என்ற மகேஷ்(25), ராமமூர்த்தி(24), மகாராஜா(28), சந்தன மாரிமுத்து(22), கண்ணன் என்ற கந்தசாமி(22), அருண்குமார் (22) ஆகிய ஏழு பேர் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள ஜெய்லர், துணை ஜெயிலர், தலைமை வார்டன், சிறை காவலர் உள்ளிட்ட ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தில் கொலை செய்யப்பட்ட சாமித்துரை கொலை வழக்கிலும் ஜேக்கப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.


இச்சூழலில் ஜேக்கப்பை போலீசார் பிடித்து அவரை விசாரிக்கும் பொழுது நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆணை குடியைச் சேர்ந்த ராக்கெட் ராஜா என்பவர் வீட்டில் ஆயுதங்கள் தனக்கு கிடைத்ததாகவும், அவர் காவல்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் இன்று காவல்துறையினர் ஆணைகுடியில் உள்ள ராக்கெட் ராஜா வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் வீட்டில் மான் கொம்பு, அரிவாள், துப்பாக்கி, துப்பாக்கியில் மாட்டக்கூடிய பைனாக்குலர் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது.  சாமித்துரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா கடந்த 2023 ஜூலை 21ஆம் தேதி தான் விடுதலை செய்யப்பட்டார். இந்த சூழலில் தற்போது அவரது வீட்டில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.