நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தையொட்டி உள்ளது. அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவர் கடந்த 16 ஆம் தேதி இரவு தனது வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை கட்டிப்போட்டுவிட்டு தூங்கச் சென்ற நிலையில் அதிகாலை எழுந்து பார்த்தபோது ஆடு ஒன்று காணாமல் போயிருந்தது. அப்போது அங்கிருந்த இரத்த கரைகளை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது ஆடு மலையடிவாரப்பகுதியில் கடித்து குதறிய நிலையில் உயிரிழந்து கிடந்தது.
இதே போல பாபநாசம் அருகேயுள்ள அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் வீட்டிலிருந்த ஆட்டையும் சிறுத்தை தாக்கியது. கடந்த ஜனவரி மாதமும் அனவன்குடியிருப்பு பகுதியில் மாரியப்பன் என்பவரது வீட்டில் வளர்த்து வரும் 2 வயது மதிக்கத்தக்க கன்றுகுட்டியின் கழுத்து, வாய் பகுதியில் சிறுத்தை தாக்கியது. கன்றுகுட்டியின் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்த போது சிறுத்தை நின்றுள்ளது. உடனே கூச்சலிட்டு அதனை விரட்டியடித்துள்ளனர். மேலும் உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். எனவே அடுத்தடுத்து தொடர்ந்து ஆடுகளை தாக்கி வேட்டையாடி செல்லும் சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரு பகுதிகளிலும் வனத்துறையினரின் மோப்ப நாயான நெஸ் (NEX) மூலமாக மோப்பம் பிடித்து சிறுத்தை வந்த வழியாக பின் தொடர்ந்து சென்றனர். இறுதியாக அனவன்குடியிருப்பு பகுதியில் மோப்பம் பிடித்தபோது அப்பகுதியிலுள்ள பொத்தை பகுதிக்கு மோப்ப நாய் சென்றடைந்தது.
இதையடுத்து மோப்ப நாய் அடையாளம் காட்டிய இடமான வேம்பையாபுரம் பகுதியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நேற்று கூண்டு வைத்தனர். தொடர்ந்து இணை இயக்குனர் இளையராஜா தலைமையில் வனக்குழுவினர் அங்கு முகாமிட்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
இதையடுத்து கிரைன் மூலம் பிடிபட்ட சிறுத்தையை வனத்துறையினர் கூண்டோடு வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர். மேலும் பிடிக்கப்பட்ட சிறுத்தையை மாஞ்சோலை அருகே கோதையாறு அணைக்கு மேல் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, சிறுத்தை அங்கு விடப்பட்டது. இதே கோதையாறு வனப்பகுதியில் தான் கடந்த ஆண்டு பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்திய அரிக்கொம்பன் காட்டு யானை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மோப்ப நாயின் நெஸின் இந்த முயற்சி பெரும் வெற்றியை கொடுத்துள்ள நிலையில் வனத்துறையினர் நெஸின் முயற்சியை பாராட்டினர்.