தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தடுப்பு தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்ததால் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை வெள்ளப்பெருக்கு தகர்த்தி தூக்கி வீசியது. மேலும் அருவியில் அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவி நீரில் மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டது. இந்த சூழலில் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல உரிய நேரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க தடை விதித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவி கரையோரம் நின்று செல்பி எடுத்து சென்று வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து வரப்பட்ட குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விரைவில் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பும் என விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியும் காத்திருக்கின்றனர்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 5 அணைக்கட்டுகள் உள்ளது. அதில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையில் தற்போது 60.50 அடி நீர் இருப்பும், 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையில் 59.50 அடி நீர் இருப்பும், 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணையில் 50.82 அடி நீர் இருப்பும், 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணையில் 29.87 அடி நீர் இருப்பும், 132 அடி கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணையில் 111.25 அடி நீர் இருப்பும் உள்ளது.
மேலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழலில் விரைவில் மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதோடு அணைப்பகுதியில் மழை அளவை பொறுத்தவரை கடனாவில் 7 மிமீ, ராமநதியில் 88.2 மிமீ, கருப்பா நதியில் 30மிமீ, குண்டாறு அணையில் 28.2 மிமீ, அடவி நயினார் அணையில் 3மிமீ என உள்ளது. மாவட்டத்தை பொறுத்தவரை ஆய்குடியில் 46மிமீ, செங்கோட்டையில் 60.8 மிமீ, தென்காசியில் 23மிமீ, சங்கரன்கோவிலில் 9 மிமீ, சிவகிரியில் 27 மிமீ என உள்ளது.