கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொதுவாக கல்லறைகளில் அடக்கம் செய்யப்படுகின்றனர். கல்லறைகளுக்குச் சென்று அவர்களை நினைவுகூர்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை இறந்தவர்களின்  சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கல்லறை திருநாளாக  கடைப்பிடிக்கிறார்கள். இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு இன்று மலர் அஞ்சலி செலுத்துவார்கள். இதற்காக ஒவ்வொரு இடங்களில் உள்ள கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்த கல்லறை தோட்டங்கள் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.




கல்லறைகளை கழுவி, பூக்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி வைப்பர், பின்னர் ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களைப் பாடி, கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்வர். அப்போது இறந்தவர்களை நினைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்துவதும் வழக்கமாக உள்ளது. மேலும், இந்தத் தினத்தையொட்டி அங்கு குவிந்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்தவர்கள் பலர் உதவிகளைச் செய்வதும் வழக்கமாக வைத்துள்ளனர். கல்லறை திருநாள் நிகழ்ச்சிக்கு தேவையான பூ, மாலை, ஊதுபத்தி போன்ற பொருட்கள் பெருமளவில் கல்லறை தோட்டத்துக்கு வெளியே விற்பனை செய்யப்படுவதுமுண்டு. 





இந்தநாளை முன்னிட்டு இன்று கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பாளையங்கோட்டையில் கல்லறை திருநாள் காலை முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாது கல்லறைகளுக்கு சென்று வெள்ளையடித்து சுத்தம்செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே போல மழையை பொருட்படுத்தாது குடை அமைத்து பூக்கள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சீவலப்பேரி கல்லறை தோட்டத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் கல்லறையை சுத்தம் செய்து கல்லறை அருகே மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அவர்களுக்கு பிடித்த உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை படைத்தும் அஞ்சலி செலுத்தினர். மேலும் இதனையொட்டி கல்லறை தோட்டம், மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் முன்னோர்கள் நினைவாக சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. அதே போல நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, சந்திப்பு,  டவுண்,  உள்ளிட்ட இடங்களில் கல்லறைத்திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதுபோன்று மாவட்ட பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கல்லறைத் தோட்டங்களுக்கு சென்று வழிபட்டனர்.