நெல்லை மாவட்டம் அம்பை சங்கரய்யா தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வேலம்மாள் (வயது 54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. முருகன் சார் பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனையடுத்து கருணை அடிப்படையில் வேலம்மாளுக்கு அரசு வேலை கிடைத்துள்ளது. அதன்படி விக்கிரமசிங்கபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலம்மாள் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. 


அந்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து இன்று காலை அம்பையில் உள்ள வேலம்மாள் வீட்டிற்கு சென்ற லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீடு முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அவரது பணி காலத்தில் சுமார் ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் தரப்பட்டு அது தொடர்பாக தற்போது சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சார்பதிவாளர் அலுவலக பெண் உதவியாளர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.