நெல்லை பாராளுமன்ற தொகுதி ஓர் பார்வை
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலப்பரப்பையும் கொண்ட ஒரே தொகுதியான நெல்லை மக்களவை தொகுதி தமிழ்நாட்டின் 38வது தொகுதியாகும். இத்தொகுதியில் 2009க்கு முன்னர் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி என 6 தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பிற்கு பின்னர் ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் என 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளது.
நெல்லை தொகுதியின் சிறப்புகள்:
பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள். தாமிரபரணி ஆறு, இருட்டுக்கடை அல்வா, கூடங்குளம் அணுமின் நிலையம், ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படைத்தளம், ஐஎஸ்ஆர்ஓ உந்துமவளாகம், பாளையங்கோட்டை மத்திய சிறை என பல்வேறு சிறப்பு இடங்களை இந்தத் தொகுதி கொண்டுள்ளது.
வெற்றி விவரம்:
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆலங்குளம், அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டு தொகுதிகளை அதிமுகவும், பாளையங்கோட்டை, ராதாபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளை திமுகவும், நாங்குநேரியை காங்கிரஸ் கட்சியும், திருநெல்வேலி தொகுதியை பாரதிய ஜனதா கட்சியும் கைப்பற்றியது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 16 லட்சத்து 20 ஆயிரத்து 541 வாக்காளர்கள் இருந்த நிலையில் 10 லட்சத்து 32, ஆயிரத்து 530 பேர் (67.20 %) வாக்களித்தார்கள். இதில் 50.65% வாக்குகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஞான திரவியம் பெற்று வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்குகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 993 அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன் 3,37,273 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றிருந்தார். வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 720 ஆக இருந்தது. திருநெல்வேலி தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்திலும், ஆலங்குளம் தொகுதி தென்காசி மாவட்டத்திலும் அமைந்துள்ளது.
வாக்காளர்களின் விவரம்:
தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து 16, லட்சத்து 42 ஆயிரத்து 305 பேர் வாக்காளர்களாக உள்ளனர். 8 லட்சத்து 02 ஆயிரத்து 293 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 39 ஆயிரத்து 863 பெண் வாக்காளர்களும் உள்ளனர். 149 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். ஆண்களை விட 37 ஆயிரத்து 500 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.1952 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தொகுதி உருவான நிலையில் 2009 ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைக்கப்பட்டது. 1952 ஆண்டு முதல் 2019 வரை 17 தேர்தல்களை கண்ட இந்த தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஐந்து முறையும், திமுக மூன்று முறையும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சுதந்திரக் கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போதைய எம்பி
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய அளவில் பதவியில் இருந்தாலும் முதல் அரசு பதவி நாடாளுமன்ற உறுப்பினர் தான். ஆங்கிலத்தில் மிகப் பெரிய புலமை இல்லாவிட்டாலும் ஹிந்தி பேசக்கூடியவர் என்ற நிலையில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒரு லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். பாராளுமன்றத்தில் கலந்து கொள்வதில் 80% வருகையை உறுதி செய்த அவர் தனி நபர் மசோதா எதுவும் கொண்டு வரவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் 226 கேள்விகளை அவர் பாராளுமன்றத்தில் கேட்டுள்ளார். 23 மசோதாக்களில் பங்கேற்று பேசியுள்ளார்.
எம்பியின் வாக்குறுதிகள்
1. தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்துவதற்கு சிறப்பு திட்டம் கொண்டு வந்து தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்
2. நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் வாழை விவசாயிகள் அதிக அளவில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு தனி விற்பனை சந்தை அமைத்து தருவேன்
3. கலைஞரின் கனவு திட்டமான நாங்குநேரி உயர் தொழில் நுட்ப பூங்கா பகுதியில் அதிக அளவில் தொழிற்சாலைகள் கொண்டுவர பாடுபடுவேன்
4. தாமிரபரணி நம்பியாறு கருமேனியாறு திட்டத்தை விரைவுபடுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வருவேன்
5. புதிய ரயில் திட்டங்களை திருநெல்வேலி தொகுதிக்கு கொண்டு வருவேன்
6. கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் IT துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகளை கொண்டு வருவேன்
7. இளைஞர்கள் வேலைக்காக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவேன்
8. கனிம வள கடத்தலை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுப்பேன்.
9. அதிகமான போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான குலவணிகர்புரம் பகுதியில் புதிய மேம்பாலம் அமைத்து தருவேன்
என்பது அவர் அளித்திருந்த வாக்குறுதிகளில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது
நிறைவேற்றப்பட்டவை
1. வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில் சேவைகள் திருநெல்வேலிக்கு வந்திருக்கிறது.
2. தாழையூத்து பகுதியில் நான்கு வழி சாலையில் மக்கள் சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
3. திருநெல்வேலி தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் கேடிசி நகர் பகுதியில் புதிய பாலம்அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை அரசு எடுத்து இருக்கிறது.
4. 10க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய பேருந்து நிறுத்தங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறார்
நிறைவேற்றப்படாதது
1. தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்துவேன் என்பது நிறைவேற்றபடவில்லை.
2. களக்காடு வாழை விவசாயிகளுக்கான தனிச்சந்தை ஏற்படுத்தி தருவது.
3. நாங்குநேரி உயர் தொழில்நுட்ப பூங்காவில் கூடுதல் தொழிற்சாலைகள் கொண்டு வருவது என்பதில் ஒரு புதிய தொழிற்சாலைகள் கூட அங்கு வரவில்லை, ஏற்கனவே செயல்பட்டு வந்த தொழிற்சாலைகளும் முழுமையாக அங்கிருந்து வெளியேறியுள்ளது.
4. தாமிரபரணி, நம்பியாறு, கருமேனி ஆறு நதிநீர் இணைப்பு திட்டத்தை தற்போது வரை முழுமையாக முடித்து தரவில்லை.
5. குண்டுகல் ஜல்லிக்கட்டு, எம் சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் ஆயிரக்கணக்கான லாரிகளில் கேரளாவிற்கு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கொண்டு செல்லப்படுவது தடுக்கப்படவில்லை.
மொத்தமாக அவர் அறிவித்ததில் 25 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே எம்பி ஞான திரவியம் நிறைவேற்றியுள்ள நிலையில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
யாருக்கு வாய்ப்பு?
நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் தலைமையே அணுகுவார் என தெரிகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தற்போது எம்பி ஆக உள்ள ஞான திரவியம், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வின் மகன் அலெக்ஸ், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா என பலரும் சீட் பெரும் முனைப்பில் உள்ளனர். தலைமை திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிரகாம்பெல்க்கு வாய்ப்பு வழங்கலாம் என கூறப்படுகிறது. களக்காட்டத்தைச் சேர்ந்த பி சி ராஜன், நாங்குநேரியைச் சேர்ந்த ஆரோக்கிய எட்வின் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஐ எஸ் இன்பத்துரை, முன்னாள் எம்பி சௌந்தரராஜன் உள்ளிட்டோர் சீட் பெரும் முனைப்பில் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. கடந்த வாரமே அவர் தேர்தல் அலுவலகத்தை திறந்து பணியை துவக்கி உள்ளார். சொந்தக் கட்சியில் அவருக்கு எதிர்ப்பும் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்படும் என்ற பேச்சும் உள்ளது. அவ்வாறு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்தவரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ளவருமான பீட்டர் அல்போன்ஸ் க்கு சீட் வழங்கப்படலாம் என தெரிகிறது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் ராமசுப்பு, தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக பா. சத்யா அறிவிக்கப்பட்டுள்ளார், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் உள்ள சட்டப் பேரவை தொகுதிகளில் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக பெற்ற வாக்குகளை விட 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தொகுதிகளில் பெற்ற வாக்குகள் கணிசமாக குறைந்துள்ளது. திமுக வலுவான கூட்டணியோடு போட்டியிடும் நிலையில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளும் களம் காண உள்ளனர். இதன் காரணமாக திருநெல்வேலி தொகுதியில் நான்கு முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.