நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். அப்போது மக்கள் தங்களுடைய குறைகளை ஆட்சியரிடம் மனுவாக அளிப்பதன் பேரில் அதன் மூலம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அப்போது நெல்லை மாவட்ட மீனவர்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 மீனவ கிராமங்களான  கூட்டப்புளி, பெருமணல், தோமையார்புரம், இடிந்தகரை,  கூத்தன்குழி,  உவரி கூட்டப்பனை, கூடுதாழை,  பெரியதாழை  ஆகிய மீனவ கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி   நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.




அப்போது ஆட்சியரை சந்தித்து குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து  முறையிட்டனர். மேலும் அவர்கள் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மனுவில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. ஒவ்வொரு முறையும் மூன்று மாதங்கள் முதல் ஐந்து மாத இடைவெளியில் மட்டுமே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.  மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாததால் பல்வேறு பிரச்சனைகளை தாங்கள் சந்திப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து நெல்லை மாவட்ட பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.


அப்போது அவர்கள் கூறியதாவது: பலநூறு ஆண்டுகளாக  நெல்லை மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் வசித்து வரும் தங்களுக்கு மீன்பிடி தொழில்  இயற்கை சீற்ற பாதிப்புகள் முதல் பிடித்து வரும் மீன்களை விற்பது வரை பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு  வாழ்ந்து வருகிறோம். இயற்கை சீற்றங்கள் முதல் மீன்பிடி தடைக்காலம் அறிவிப்புகளை கடைக்கோடி மீனவர்களும் தெரிந்து கொள்ள மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டமே மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது. அதே போல வாட்ஸ் அப் மூலம் யார் அனுப்புகின்றனர் என்ற அடையாளமே இல்லாமல் தகவல்கள் வருகின்றன. இது போன்ற தகவல் பரிமாற்றத்தை மீன்வளத்துறை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும், அதே போல இனி வரும் காலங்களில் வாட்ஸ்அப் மூலம் எவ்வித தகவல்களும் பரிமாற கூடாது. முறைப்படி மட்டுமே அனுப்ப வேண்டும். அதேபோல  நெல்லை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் கூட்டம் சரிவர நடத்துவதில்லை. முறையான அறிவிப்பு கொடுப்பதில்லை. அப்படியே அறிவிப்பு வந்தாலும் குறிப்பிட்ட சில மீனவர்களுக்கு மட்டுமே வருகிறது. பாதிக்கப்படக்கூடிய மீனவர்களுக்கு இந்த தகவல் சென்றடைவதில்லை. மீனவர்களை ஊதியம் இல்லாத கடல் பாதுகாப்பாளர்களாகவும், மனித ஓட்டு போடும் இயந்திரமாகவும் மட்டுமே பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் மீன்வளத்துறை பாரபட்ச இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி மாதந்தோறும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 




அதே போல மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசும் பொழுது, கூட்டப்பனை கிராமத்தில் இருந்து வந்துள்ளேன். கூட்டபனை கிராமம் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது. உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. வீடுகள், கோவில்கள் அனைத்துமே பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கிய ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் சென்று சேரவில்லை, எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதி இல்லை, இதனால் பலருக்கு சிறுநீரக பிரச்சினை இருக்கிறது. கடற்கரை கிராமங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு கூட்டம் போட்டது போல் மீனவர்களுக்கும் கூட்டம் போட்டு எங்களது குறைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கு அரசு அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எங்களது கடற்கரை கிராமத்தில் இனி வரும் சந்ததிகள் வாழ்வாதாரம் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.