நெல்லை மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 700க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி ஊதியமாக 480 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒப்பந்த பணியாளர்களை தனியார் நிறுவனத்தின் மூலமாக தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த பணியாளர்களாக தூய்மை பணியாளர்களை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். குறிப்பாக நெல்லை மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம், காத்திருப்பு போராட்டம் என பல்வேறு போராட்டங்களை தூய்மை பணியாளர்கள் மேற்கொண்ட நிலையில் கடந்த நான்காம் தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தனியார் நிறுவனத்தின் மூலமாக தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தம் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் அந்த தீர்மானத்திற்கு முரணாக தற்போது நெல்லை மாநகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களை தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் மூலமாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.




தொடர்ந்து தூய்மைப் பணிகளை புறக்கணித்து தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று நெல்லை மாநகராட்சி முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தனர். அவர்களின் இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக மாநகராட்சியின் அலுவலக வாயில்கள் பூட்டப்பட்டு காவல்துறையினர், வருவாய்த் துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். கடுமையான விசாரணை, சோதனைக்கு பின்பே பொதுமக்களும் மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமருவதற்கான இடத்தை காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி அமைத்திருந்தனர். மாநகராட்சியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வருகை தந்த நிலையில் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி தடையை மீறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், காவல்துறை தூய்மை பணியாளர்களை கைது செய்வதாக அறிவித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து தூய்மை பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்




எனினும் வலுக்கட்டாயமாகவும், குண்டுகட்டாகவும் காவல்துறையினர் தூய்மை பணியாளர்களை கைது செய்ய ஆரம்பித்ததால் கடுமையான தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால்  நெல்லை - தென்காசி செல்லும் பிரதான சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை பரபரப்பாக காட்சியளித்தது. காவல்துறையின் கைது நடவடிக்கை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டம், வாக்குவாதம் என மாநகராட்சி அலுவலகத்தின் முன் நெடுஞ்சாலை பரபரப்பாக மாறியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்றுப்பாதையில்  போக்குவரத்து இயக்கப்பட்டது. தடையை மீறி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாநகராட்சியின் ஒப்பந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டபத்திலும் உணவு உண்ண மறுத்து போராட்டத்தை தொடர்வோம் என்று தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.


கொரோனா காலகட்டம் தொடங்கி தற்போது வரை எவ்விதமான சமரசமும் இன்றி தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் தங்களுக்கு மாநகராட்சி துரோகம் இழைத்து விட்டதாகவும், தங்களின் வாழ்வாதாரத்தை மாநகராட்சியும் நசுக்க பார்ப்பதாக தூய்மை பணியாளர்கள் கண்ணீருடன் தங்கள் வேதனைகளை பதிவு செய்தனர். தினக்கூலியாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் உரிய தீர்வினை எட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.