நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ளது வீரவநல்லூர் கிராமம். இப்பகுதியை சேர்ந்த துரைகதிரேசன் என்பவரின் மகன் விசய ராகவன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த வங்கி துணை மேலாளர் தீபிகா என்பவருக்கும் நேற்று முன் தினம் வீரவநல்லூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற்றது. மற்றவர்களை போல் இந்து முறைப்படியோ, கிறிஸ்தவ முறைப்படியோ அல்லது இஸ்லாமிய முறைப்படியோ என இல்லாமல் வித்தியாசமான முறையில் தங்களது திருமணத்தை நடத்தினர்.




மணமேடையில் பெரியவர்கள் சூழ்ந்து நிற்க தமிழறிஞர் குமாரசுப்பிரமணியம் என்பவரின் தலைமையில் திருக்குறள் வாசித்து, மணமக்கள் அருகிலேயே திருவள்ளுர் சிலையை வைத்து இத்திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், மணமேடையில் மணமக்கள் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு மேலே தங்களது பெயருக்கு அருகே திருவள்ளுவர் மற்றும் பெரியார் படம் வைக்கப்பட்டு இருந்தது. பெரியோர்களின் ஆசீர்வாதத்துடன் வித்தியாசமான முறையில் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் இருவரும் அப்பகுதியிலுள்ள நூலகத்திற்கு சென்றனர். அங்கு அப்பகுதியிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு திருமண பரிசாக சுமார் 30 மாணவ - மாணவிகளுக்கு  நூலக உறுப்பினர் சந்தா கட்டி உறுப்பினர்களாக சேர்த்தனர். இவர்களின் இச்செயல் அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு சுற்றியிருப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.




மேலும், இவர்கள் தங்களது திருமணத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அந்த அழைப்பு மடலுக்கு முதல்வரிடம் இருந்து வாழ்த்து மடல் வந்தது மணமக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் மணமக்களின் பெரிய பேனர்களுக்கு பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து மடலை திருமண மண்டபத்திற்கு அருகே மிகப்பெரிய பேனராக வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்வர் அனுப்பிய வாழ்த்து மடலில் “ இயல்பினாள் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வருள் எல்லாம் தலை” என்று அய்யன் திருவள்ளுவர் வகுத்தளித்திருக்கும் இல்வாழ்வின் இலக்கணம் உணர்ந்து; தமிழும் அமுதும் போல, பெரியாரும் பகுத்தறிவும் போல, அண்ணாவும் ஆற்றலும் போல, கலைஞரும் கழகமும் போல மணமக்கள் பல்லாண்டு காலம் பலரும் போற்றும் இணையராய் இல்லறம் காண விளைகிறேன் என்று வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து மணமகன் விசயராகவன் கூறுகையில், “பள்ளி பருவம் முதலே எனக்கு தமிழ் மீது மிகுந்த ஆர்வமும் அதன் மீது அதிக பிரியமும் உண்டு. இதனால் தனது திருமணத்தை தமிழை முன்னிருத்தியே நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அதன்படி தமிழுக்கு ஆதியாக இருக்க கூடிய திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் சிலை முன்பு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். அதன்படியே எனது திருமணம் நடைபெற்றது. எனவே எனது பத்தாண்டு கால கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் உள்ளேன். மேலும் எங்களது திருமணத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து மடல் அனுப்பியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கும் எங்களது மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” என கூறினார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண