அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவேண்டும், தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கந்துவட்டி கொடுமைகளை தடுக்கவும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தால் வழங்கப்படும் அதிக வட்டிக்கான கடனால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்வதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தடையை மீறி ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பியதால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யப் போவதாக தெரிவித்தனர்.


தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களை மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க அனுமதித்தனர். தொடர்ந்து மனு அளிப்பதற்கு திரளான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல முயன்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான கதவு போலீசாரால் மூடப்பட்டு அனைவரையும் பாதியிலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் கற்பகம் கூறும் பொழுது, நெல்லை மாவட்டத்தில் மைக்ரோ பைனான்ஸ் கந்துவட்டி பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. பாப்பாக்குடி உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 5000 கடன் வாங்கிய பெண்கள் வாரத்திற்கு 2000 வட்டி கட்டக்கூடிய மோசமான நிலை இருந்து வருகிறது. வட்டிக்கு கடன் வழங்கிய நபர்கள் வீட்டின் முன்பு காலை 6 மணிக்கு வந்து அமர்ந்து கடன் வாங்கிய பெண்களின் குழந்தைகளை கடத்தி விடுவோம், கஞ்சாவை வீட்டிற்குள் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸில் பிடித்துக் கொடுப்போம், விபச்சாரம் செய்வதாகவும் காவல்துறையினரிடம் புகார் கொடுப்போம் என்பது போன்று மிரட்டும் நிலை இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




இதுகுறித்து மாதர் சங்கத்தினர் கூறுகையில், “மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கந்துவட்டி கொடுக்கும் நபர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். பெண்கள் கந்துவட்டிக்காரர்களுக்கு பயந்து பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையில் மறைந்து கொண்டும் பேருந்தில் ஒளிந்து கொண்டும் தங்களை தற்காத்துக் கொள்ளும் நிலை தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் இருந்து வருகிறது. தமிழக முழுவதும் கண்டு வட்டி கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர்கள் கட்டாயம் கந்து வட்டி புகார் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ச்சியான போராட்டத்தை ஜனநாயக மாதர் சங்கம் முன்னெடுக்கும். கந்துவட்டி பாதிப்பு தொடர்பாக காவல்நிலையங்களில் புகார் கொடுத்தால் காவல்துறை அதிகாரிகள் கடன் வாங்கும் நீங்கள் பல்லை காட்டிக் கொண்டு பணம் வாங்கிவிட்டு திருப்பி கொடுக்கும்போது ஒழுங்காக கொடுக்க தெரியாதா என  கந்துவட்டி மற்றும் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக போலீஸார் செயல்படுகின்றனர். பெண்களை பாதுகாப்பதற்கு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்னால் நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் கந்துவட்டிக்கு பணம் வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலையில் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு இந்த சம்பவங்கள் தெரிந்தும் நடவடிக்கை எடுக்க அவர்கள் தயங்குகிறார்கள்” என அவர் தெரிவித்தார்