தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி  5,796 வீடுகளும், 20,948 பேரும் வசித்து வந்த நிலையில் தற்போது சுமார் 30,000 மக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள பொது மக்களுக்கு பேரூராட்சியின் சார்பில் 
நாள் ஒன்றுக்கு இரண்டு வார்டுகளாக பிரித்து தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வரப்படுகிறது. இதனால் சுழற்சி முறையில் ஒவ்வொரு வீடுகளுக்கும் 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று 5வது வார்டில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அந்த குடிநீரானது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில்  இருந்தது. குறிப்பாக சாக்கடை கலந்த சிகப்பு நிறத்தில் குடிநீர் வந்தது. மேலும் அந்த குடிநீரில் துர்நாற்றம் வீசியதாகவும் தெரிகிறது.


இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.. மேலும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அதிகாரிகள் அதனை எடுக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர், குறிப்பாக பொதுமக்களுக்கு எட்டு நாட்களுக்கு ஒரு முறை 45 நிமிடம் மட்டுமே குடிநீர் விநியோகமானது செய்யப்படும் என்றும் ஆனால் நேற்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இருந்தும் பொதுமக்களுக்கு பயன்படாத வண்ணம் வீணானதாக குற்றம் சாட்டினர். 




 


தற்பொழுது தட்பவெப்ப நிலை மாறிமாறி வருவதாலும், இந்த குடிநீரை குடித்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  பல்வேறு நோய் பாதிப்பிற்கு ஆளாகும் சூழல் உருவாகும். எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையிட்டு சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த சாக்கடை கலந்த குடிநீர் தொடர்பாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் செய்தி வெளியானது.. இதனை தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸாக வெளியிட்டு உள்ளனர். அதில் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் பஞ்சாயத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் என்று அப்புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு கீழே வடிவேல் காமெடி புகைப்படத்துடன் ”இது சாக்லேட் ப்ளேவர் பா” என்று கலாய்க்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண