நெல்லை மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என ஏற்கனவே மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு கூட்டத்திற்கான பொருள் குறித்த தகவல் 55 மாமன்ற உறுப்பினர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து இன்று காலை நெல்லை மாநகராட்சியில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் 10 மணிக்கு கூட்ட அரங்கிற்கு வந்தார். 10:30 மணி வரை கூட்டம் அரங்கிற்குள் மேயர், துணை மேயர் திமுக மாமன்ற உறுப்பினர்கள் என யாரும் வரவில்லை. தொடர்ந்து 10.40 மணிக்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், சீதா பாலன், பிரபாசங்கரி, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் அனுராதா ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர். கூட்டரங்கே காலியாக இருந்த நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததால்  ஆணையர் கூட்ட அரங்கில் இருந்து 40 நிமிடத்திற்கு பின்பு வெளியேறினார்.  நெல்லை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்ற பின் தாக்கரே சுபம் ஞானதேவ் பங்கேற்கும் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.


நெல்லை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள், மேயர் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதல் போக்கினால் மக்கள் பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமன்ற உறுப்பினர் ரவீந்தர், மாநகராட்சி ஊழியர் சிவனையா இடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவல் நிலையத்துக்கு சென்று இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் நெல்லை மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். மேயர் - கவுன்சிலர்கள் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கட்சி தலைமை முடிவெடுத்து நெல்லை மாநகராட்சி பகுதியில் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர் தலைமையில் பல்வேறு திட்டப்பணிகள் தொடக்க விழாவோடு சேர்த்து மாமன்ற உறுப்பினர்களிடம் குறைகளை கேட்டு ஒரு முடிவு எடுக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டு அதன்படி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் அனைத்து மாமன்ற உறுப்பினர்களையும் வரவழைத்து அங்கு நடைபெறும் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சி தொண்டர்கள் அனைவரையும் மாநகராட்சி கூட்டணியில் இருந்து வெளியேற நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, நெல்லை மாநகராட்சியின் மேயர், துணை மேயர், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர், நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுகவைச் சேர்ந்த 41 மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் கூட்ட அரங்கில் அனுமதிக்கப்பட்டனர்.


தொடர்ந்து மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களிடம் அங்கு நடக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாகவே அமைச்சர் கேட்டறிந்தார். பெரும்பான்மையான கவுன்சிலர்கள் மாநகராட்சி மேயர் மீது குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் சேர்ந்து மாநகராட்சி மேயரை சரமாரியாக கேள்விகள் கேட்டு டோஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது. மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அமைதியாக வரும் காலங்களில் மாமன்ற கூட்டத்தை நடத்த அறிவுரையும் வழங்கப்பட்டது. வார்டுகளுக்கு தேவையான பிரச்சனைகளை நேரடியாக மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து தெரிவிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள் இடையே இனி பிரச்சினை வரக்கூடாது என கூறி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மேயர் இடையே நடைபெற்று வந்த போராட்டத்தை முடித்து வைக்க சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும், மாவட்டத்திற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சரும், நேரடியாக களமிறங்கி பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்ததாக கூறப்பட்டது.




இந்த நிலையில் தான் இன்று நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டரங்கிற்கு யாரும் வராத நிலையில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையாளர் அறை அருகே உள்ள சிறு  கூட்ட அரங்கில் ஒன்று திரண்டு அமர்ந்து தங்களுக்குள் தனி கூட்டம் நடத்தினர். தொடர்ந்து மேயர், துணைமேயர் ஆகியோர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்த நிலையில் மேயர் சரவணன் துணைமேயர் ராஜ் ஆகியோர் மாமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பேச்சு வார்த்தை நீடித்து வரும் நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் - மேயர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாக தெரிகிறது.