நெல்லை மாவட்டம் பணகுடி நான்கு வழி சாலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள சாலை பகுதியில் கையுறை, காலி மருந்து பாட்டில்கள், சிரஞ்சு போன்ற மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் சுகாதார சீர்கேடு காரணமாக தொற்றுநோய் பரவும் பீதி நிலவுகிறது.






 

இது போன்ற மருத்துவ கழிவுகளை சேகரிக்க நியமிக்கப்பட்டுள்ள வாகனங்களில் ஒப்படைக்காமல் சாலையோரங்களில் கொட்டப்பட்டு வருகின்றன, இதன் எதிரொலியாக பொதுமக்கள் தரப்பில் தொற்றுநோய் பரவலும் ஏற்படலாம். எனவே இதனை உடனடியாக அகற்றவும் வரும் காலங்களில் இதுபோன்ற மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தவிர்க்கும் விதமாகவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பணகுடி சுகாதார ஆய்வாளர் மனோகர், மருத்துவர் கோலப்பன் மற்றும் பணகுடி நகர பஞ்சாயத்து  துறையினர் சுகாதார மேற்பார்வையாளர் சசிகுமார் தலைமையில் சென்று கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றினர். இதுகுறித்து பணகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மருத்துவமனைக்கு சுகாதார துறை சார்பில் எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்ப உள்ளனர்.



 


 

பணகுடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் இது போன்ற மருத்துவ கழிவுகள் அடிக்கடி கொட்டப்படுகிறது. இதனை நிரந்தரமாக தடுக்க மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றசெயலில் ஈடுபடும் மருத்துவமனை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கடுமையான நடவடிக்கை எடுக்கும் போது தான் மருத்துவமனைகள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். ” என கோரிக்கை விடுத்தனர்.