கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி மாமன்ற மன்றத்தில் மண்டலத் தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவில் வடக்கு மண்டல தலைவர் பதவிக்கு கதிர்வேல், தெற்கு மண்டலதிற்கு தனலட்சுமி, கிழக்கு மண்டலத்திற்கு லக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டலத்திற்கு தெய்வானை தமிழ்மறை, மத்திய மண்டலத்திற்கு மீனா லோகு ஆகியோர் போட்டியிட்டனர். திமுக கூட்டணி கட்சிகளுக்கு மண்டலத் தலைவர் பதவிகளை ஒதுக்கீடு செய்யாமல், நேரடியாக போட்டியிட்டது. வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த 5 பேரும் மண்டல தலைவர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா சான்றிதழ்களை வழங்கினார். வடக்கு மண்டல தலைவராக தேர்வான கதிர்வேல் ஆட்டோ ஓட்டுனராக இருந்து கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது. கோவை மாநகராட்சி மண்டல தலைவர்களுக்கான தேர்தலில் 3 அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இதையடுத்து கோவை மாநகராட்சியில் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தாக்கல் செய்தார். கோவை மாநகராட்சியில் மொத்த வருவாய் 2317.97 கோடி உள்ள நிலையில், மொத்த செலவீனம் 2337.28 கோடி ரூபாயாக உள்ளது. 19.31 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது. இந்த பட்ஜெட்டில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக ஒரு மண்டலத்திற்கு 10 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பந்தயசாலை, டி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டணம் பரிச்சாத்திய முறையில் வசூலிக்கப்படும் எனவும், சிறப்பாக பணியாற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு ’சிறந்த மாமன்ற உறுப்பினர்’ விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி பட்ஜெட் புத்தகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றன. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. துறைக்கு தொடர்பில்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் படத்தை கோவையில் திமுக வெற்றிக்கு உதவியதற்காக பட்ஜெட் புத்தகத்தில் இடம் பெறச் செய்து, திமுகவினர் தங்களது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளதாக முணுமுணுப்பு எழுந்தது. இதற்கு முன்னதாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மேயர் கல்பனா வாசித்த போது, தீண்டாமையை கடைபிடிக்க மாட்டோம் என்பதற்கு பதிலாக தீண்டாமையை கடைபிடிப்போம் என தவறாக வாசித்தார். இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் கூறும் போது, “தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை மேயர் தவறாக படித்தார். இது கோவை மக்களுக்கு வந்த சோதனை. கோவை மாநகராட்சி பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த பட்ஜெட் ரங்கோலி கோலம் மற்றும் காலி பெருங்காய டப்பா போல பயனற்றதாக உள்ளது. மக்களுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை. எனவே பட்ஜெட் மீதான விவாதத்தை புறக்கணிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.