நெல்லை மாவட்டம் பருத்திப்பாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது ஆணைபுரம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 120க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 15 நாள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வந்து கொண்டிருந்தது, தற்போது 3 மாதங்கள் ஆகியும் சீராக குடிநீர் விநியோகம் இல்லை, இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறோம் என்று குற்றம் சாட்டினர். மேலும் இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திலும், யூனியன் அலுவலகத்திலும் அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள் சமீபத்தில் இது தொடர்பாக ஊர் மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்..




அப்போதும் நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் நேரில் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இருப்பினும் 3 மாதங்கள் ஆகியும் இதுவரை  தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக குடிநீர் பற்றாக்குறை தீர்க்கக்கோரி காலி குடங்களை அங்குள்ள சாலையோர மரத்தில் கயிறு கட்டி தொங்கவிட்டு தூக்கிலிடும்  நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் இன்று வரை சுமார் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிதண்ணீர் வருகிறது. இதனால் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். அதிலும் அதிகபட்சம் 15 குடங்கள் மட்டுமே தண்ணீர் கிடைக்கின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கள் ஊரில் இருந்த ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் கிடைத்து வந்தது. தற்போது அதுவும் பழுது ஏற்பட்டு விட்டதால் அதை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். போர் வாட்டர் கூட கிடைப்பதில்லை. தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் வசதி இல்லை, இதனால் இக்கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மூன்று மாதங்கள் ஆகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் குடத்தை தூக்கிலிட்டத்து போல் நாங்களும் தூக்கில் தொங்கும் நிலை தான் ஏற்படும்" என்று தெரிவித்தார்.