நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே ரஹ்மத் நகரை சேர்ந்தவர் பொறியாளர் செந்தில் குமரன், இவர் கடந்த ஆண்டு ஜியோ பைபர் கனெக்‌ஷன் வாங்கியுள்ளார். இந்த திட்டத்தில் அமேசான் பிரைம் உட்பட ஓடிடி சேர்த்து இலவசமாக வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை பார்த்து இதனை தேர்வு செய்த செந்தில் குமரன் 999 ரூபாய் கட்டணமாகவும், ஜிஎஸ்டி 18 % சேர்த்து மொத்தம் 1178.82 பைசா இலவசமாக கிடைக்கும் என நம்பி கட்டணம் செலுத்தியுள்ளார். ஆனால் செப்டம்பர், அக்டோபர் என 3 மாதங்கள் ஆகியும் அமேசான் பிரைம் & ஓடிடி இலவசம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அவர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பின்னர் பணியாளர் ஒருவர் நேரில் வந்து ஜியோ பைபர் கனெக்‌ஷனை ஆய்வு செய்துள்ளார். அதில் செந்தில்குமரன் பயன்படுத்தும் மோடம் 5 ஜிக்கு சப்போர்ட் செய்யாது எனவும், விளம்பரம் 5 ஜி என கொடுத்துவிட்டு 4 ஜி தான் உங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் இலவசமாக ஓடிடி கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.




இதனை கேட்ட அவர் மன உளைச்சலுக்கு ஆளானதோடு மீண்டும் பொதுமேலாளர் மற்றும் நிர்வாக இயக்குனரை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியுள்ளார். அதன் பின்னர் பணியாளர் ஒருவர் செந்தில்குமரனை தொடர்பு கொண்டு நவம்பர் மாத கட்டணத்தை செலுத்தினால் தான் அமேசான் பிரைம் மற்றும் ஓடிடி இலவசமாக தெரியும் என கூறியுள்ளார். அதனையும் கட்டி ரசீதை பெற்றுக் கொண்ட நிலையில் எந்த ஒரு இலவசமும் கிடைக்கவில்லை. இதனால் மன வேதனையடைந்த செந்தில்குமரன் வழக்கறிஞர் பிரம்மநாயகம் மூலம் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.




இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் மனுதாரருக்கு  ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ₹10,000/- (பத்தாயிரம்) ரூபாயும், வழக்குச் செலவு 2000/- ரூபாயும், மனுதாரர் 3 மாதமாக செலுத்திய கட்டணத் தொகை 3536.46 பைசாவை வழக்கு தாக்கல் செய்த நாள் முதல் 6 சதவீத வட்டியும் சேர்த்து  வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்க தவறினால் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண