காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் இன்று நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,  "சிறுபான்மையின மாணவ மாணவியருக்கு நெல்லை மாவட்டத்தில் மட்டும் 43 ஆயிரத்து 23 பேருக்கு கல்வி உதவிதொகை 7 கோடியே 11 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின் மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சரி செய்ய தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறோம். ஏறக்குறைய 20 விழுக்காடு இருக்கிற சிறுபான்மையின மக்கள் மத்தியிலே பீதியையும், அச்சத்தையும், அவ நம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆளுநர் தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ்நாட்டின் நிர்வாகத்தையும் அரசையும், அதன் செயல்பாடுகளையும் நிலைகுலைய செய்யக்கூடிய அளவிற்கு ஆளுநர்  தொடர்ந்து பேசி வருவது தமிழ்நாட்டின் பொருளாதார சமூக முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும்..


தமிழ்நாட்டை ஒரு வன்முறை களமாக மாற்றவும், வெறுப்பு அரசியலை வேகமாக வளர்த்தெடுத்து வன்முறைகளை தொடர்ந்து அரங்கேற்றுகின்ற மாநிலமாக மாற்றுவதற்கு ஒரு புறம் ஆளுநரின் பேச்சு அவரது நடவடிக்கைகள், இன்னொரு புறம் தமிழக பாஜக தலைவராக இருக்கிற அண்ணாமலையின் நடவடிக்கைகளும் தான். அதிலும் குறிப்பாக  இரண்டு பேரும் ஒன்றியத்தில் ஆளுகின்ற கட்சியாக இருக்கிற பாஜகவின் பிரதிகளாக இருக்கிற காரணத்தினால் ஒன்றிய அரசே இது போன்ற சீர்குலைப்பு வேலைகளை செய்கிறதோ என்ற அச்சத்தை உண்டாக்குகிற அளவிற்கு அவர்கள்  செயல்படுகிறார்கள்


50 ஆண்டுகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காமல் இருப்பது மிகப்பெரிய அவமானம். இட ஒதுக்கீடு என்பது அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு  இட ஒதுக்கீடு அளிப்பது மிகப்பெரிய சமூக அநீதி. கேரளா, தமிழக அரசுக்கு எதிராக செயல்படும்  ஆளுநர்கள் தங்களின்  செயல்பாடுகளை கைவிட வேண்டும். இந்து மதம் மட்டுமல்ல எல்லா மதத்திலும் சங்கிகள் இருப்பதாகவும், அவர்கள் கோவை மாவட்டத்தை  சனாதனத்தின் சோதனை கூடமாக  மாற்ற நினைக்கிறார்கள்.


சனாதானத்தின் சோதனை களமாக கோவையை, கொங்கு மண்டலத்தை மாற்ற முயற்சி நடக்கிறது. இந்துகளில் மட்டுமல்ல இஸ்லாமியர்களிலும், கிறிஸ்துவர்கள் என எல்லா மதத்திலும் சங்கிகள் இருக்கிறார்கள். அதே வேளையில் இந்தியாவில் மதக்கலவரம் நடந்த இடங்களிலெல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது போல் தமிழகத்தில் நடக்காது.


சரித்திரத்தை பார்த்தால் காங்கிரசை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். வெள்ளைகாரர்களால் அழிக்க முடியாதது காங்கிரஸ். ஒரு அரசியல் கட்சி தோற்பது, ஜெயிப்பது என்பது நடக்கக்கூடியது. ஆனால் ஒரு கட்சியை அழிப்பதில் உள்துறை அமைச்சருக்கு என்ன ஆதாயம்?  காங்கிரசை அழிப்பேன், கம்னியூஸ்டை அழிப்பேன், கழகத்தை அழிப்பேன் என்றால் இந்த நாட்டை ஒரு கட்சி ஜனநாயகமாக மாற்ற முயற்சிக்கிறாரா?அதனை அனுமதிக்க மாட்டோம், காங்கிரசை அழிப்பதற்கு இனிமேல் தான் ஒருவர் பிறந்து வர வேண்டும். குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பங்கேற்பார் என நம்புகிறோம், குஜராத்தில் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண