தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் நாகரிகம் தான் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என்பதை உலகறியச் செய்யும் வகையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதல்வர் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வு செய்ய உத்தரவிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
தொல்லியல் துறை:
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நம்பியாற்று படுகையில் உள்ள துலுக்கர்பட்டியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் அகழாய்வு இயக்குனர் வசந்தகுமார், இணை இயக்குனர் காளிஸ்வரன் மற்றும் தொல்லியல் துறையினர் பணிகளை தொடங்கினர்.
1900க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள்
அங்குள்ள வாழ்விடப்பகுதியில் 18 குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 1900க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல 1800க்கும் மேற்பட்ட குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள், வெண்மை நிறத்தினால் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் உள்ளிட்டவைகளும் கிடைத்துள்ளது.
அந்த பானை ஓடுகளில் திஈய, திச, குவிர(ன்) ஆகிய தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த ஓடு நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற சமூகம் வாழ்ந்து வந்தமைக்கு சான்றாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக ஆய்வுகள் நடைபெற்று வரும் சூழலில் கிடைக்கப்பெறும் தகவல்கள் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி வல்லுநர்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வருகின்றது.
இரும்பு உருக்கும் தொழிற்சாலை இருந்த ஆதாரம்:
இந்த நிலையில் தற்போது அகழாய்வில் இரும்பு உருக்கு தொழிற்கூடம் இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக உருக்கு உலைக்கான தளம், இரும்பு தாதுப் பொருட்கள், இரும்பு கசடு, ஊதுலை குழாய் மற்றும் இரும்பு தொல்பொருட்களான இரும்பு உளி, வளையம் போன்ற அரிய வகை பழங்கால பொருட்கள் இரும்பு உருக்கு தொழிற்கூடம் இருந்தமையை உறுதிப்படுத்துகின்றன. நம்பியாற்றங்கரையில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் மூலம் செழிப்பான நாகரீகம் இருந்தமையை உறுதிபடுத்தபட்டுள்ளது தெரியவருகிறது என தொல்லியல் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்