தென்காசி மாவட்டம் கடையம் மேற்குத்தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை, கரடி, பிளா, உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு பொதுமக்களையும் அச்சுறுத்துகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி ஒருவரை கரடி ஒன்று சரமாரியாக கடித்து குதறியது. அவரது அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த விவசாயி ஒருவரையும் முகம் தெரியாத அளவிற்கு சிதைத்தது. பின்னர் அந்த கரடியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து சென்றனர். அளவுக்கு அதிகமான மருந்தை செலுத்தியதால் கரடி உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உறைந்திருந்தனர். இந்த நிலையில் தற்போது சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.


குறிப்பாக பொத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் முருகன் (வயது 48), தனது வீட்டில் நாய்கள் வளர்த்து வருகிறார். விவசாயம் செய்து வருவதால் காவலுக்காக நாய்களை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டின் அருகிலுள்ள வேப்ப மரத்தில் நாயை கட்டி போட்டு விட்டு தூங்க சென்றுள்ளனர். தொடர்ந்து இன்று அதிகாலையில் நாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது நாய் கடித்து குதறப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. நாயின் முகத்தை தவிர வயிறு உள்ளிட்ட பாகங்கள் கடித்து குதறப்பட்டு குடல் வெளியே வந்த  நிலையில் இறந்து கிடந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து இறங்கிய சிறுத்தை முருகன் வீட்டில் கட்டி போட்டிருந்த நாயை கடித்து குதறி தின்றுள்ளதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முருகன் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின் தகவலறிந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.


அதில் சிறுத்தையின் கால் தடங்கள் எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் முருகன் குடும்பத்தினர் சிறுத்தை வந்ததாக கூறியுள்ளனர். நாய் கடித்து குதறப்பட்டிருப்பதை பார்க்கும் பொழுது சிறுத்தை வந்து சென்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டிருப்பதோடு சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென்காசி அருகே சிறுத்தை ஊருக்குள் வந்து நாயை கடித்து குதறிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் வன விலங்குகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.