நெல்லை மாவட்டம் பணகுடி கோரி காலனியை சேர்ந்தவர் சித்திரை செல்வன்(36). இவர் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். பணகுடி காவல் நிலையத்தில் 44-வயது பெண் ஒருவர் இவர் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில் சப் இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் தன்னை காரில் அழைத்து சென்று தாக்கியதாக தெரிவித்தார். புகார் கொடுத்துவிட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், அந்த பெண்ணுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் சித்திரை செல்வன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாகவும், அவருக்கு செலவுக்கு பணம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே அவர்களுக்குள் திடீரென ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண் மீண்டும் தனது கணவருடன் சேர்ந்து விட்டார். இதனையறிந்த சித்திரை செல்வன் அந்த பெண் ஏமாற்றி பணம் பறித்துவிட்டதாகவும், அதனை திருப்பி தருமாறு கேட்டு அடிக்கடி அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சித்திரை செல்வன், அந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள காட்டுப்பகுதியில் வைத்து அவரை அவதூறாக பேசி பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என கூறி தாக்கிய விட்டு பின் பணகுடியில் இறக்கி விட்டு சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. அதன் பின்னரே காயமடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பணகுடி போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வன் மீது இந்திய தண்டனை சட்டம் 294-பி(பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல்), 323(காயப்படுத்துதல்), பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை காரில் அழைத்துச் சென்று சப் இன்ஸ்பெக்டர் அவரை தாக்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..