நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக தேவைப்பட்டால் தமிழக சபாநாயகரிடமும் விசாரணை செய்வோம் என்று தென் மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.


நெல்லை கிழக்கு காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக ஐஜி கண்ணன் நெல்லையில் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது விசாரணை தொடர்பாக பல்வேறு தகவல்களை அவர் தெரிவித்தார். அதில், “ ஜெயக்குமார் வயிற்றில் 15 x 50 செ.மீ கடப்பா கல் கட்டப்பட்டு இருந்தது. வாயில் இரும்பு பிரஷ் இருந்தது.  முதுகு பகுதிகள் எரியவில்லை . இடைநிலை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது. லெட்டரில் குறிப்பிடப்பட்ட 32  நபர்களையும் விசாரித்து அவர்களிடம் ரிப்போர்ட் பெற்றுள்ளோம். விசாரணை முழுமை அடையவில்லை. அறிவியல் ரீதியாக தடயவியல் நிபுணர்களை கொண்டு சோதனை நடத்தி உள்ளோம். சந்தேக மரணம் அடிப்படையில் 174 பிரிவில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். என்ன நிலையில் உடல் இருந்தது என்பது குறித்து இடைக்கால உடற்கூறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. உறவினர்கள், அவருடைய கையெழுத்து என உறுதி செய்கிறார்கள். ஆனால் அதனையும் அறிவியல் பூர்வமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.




முதலில் ராம ஜெயம் போன்று கொலை என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் அவ்வாறு எளிதாக முடிவுக்கு வர முடியவில்லை.தேவைப்பட்டால் தமிழக சபாநாயகரிடமும் விசாரணை செய்வோம். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வழக்கில் 10 டிஎஸ்பிக்கள் கொண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இதில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும். சைபர் கிரைம், தடய அறிவியல் துறை, கைரேகை நிபுணர் ஆகியோர் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை இன்னும் முழுமை பெறவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட பிரேத பரிசோதனை தகவலில் கொலையா ? தற்கொலையா என எதுவும் தெரிய வரவில்லை. இன்னும் ஒரு வார காலத்திற்குள் அறிவியல் ரீதியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் வழக்கில் முடிவு வெளிவரும்” என்று தெரிவித்தார்.