நெல்லை மாவட்டத்தில் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு IIT, JEE நுழைவுத் தேர்விற்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு அவர்களுக்கான இலவச பயிற்சியை நெல்லை ஆட்சியர் விஷ்ணு, இந்த வருடம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக தொடங்கியுள்ளார். JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இலவச வகுப்புகளில் சேர்வதற்கு கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி  நுழைவுத் தேர்வு  நடத்தப்பட்டு இதில் பல்வேறு அரசு பள்ளியில் இருந்து 159 மாணவர்கள் மற்றும் 284 மாணவிகள் என மொத்தம் 443 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர், இதில் மதிப்பெண் அடிப்படையில் 72 மாணவ, மாணவியர் அழைக்கப்பட்டு டிசம்பர் 18, 19 இல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாணவர்களின் ஆர்வம், திறமை, பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றை கேட்டறிந்து 13 மாணவியர், 8 மாணவர்கள் என மொத்தம் 21 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,




நெல்லை மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேட்டை,  ஏர்வாடி, களக்காடு, கூடங்குளம், முனைஞ்சிப்பட்டி, மருதகுளம், திருக்குறுங்குடி, செட்டிகுளம் உட்பட 14 அரசு பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கல்லூரி பேராசிரியர்கள் மூலமாக நடந்து வருகிறது,




இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ( IIT - இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் 21 மாணவ-மாணவிகளும் சென்று அங்கு நேரடியாக பல்வேறு விஷயங்களை கற்று கொள்ள ஆட்சியர் விஷ்ணு ஏற்பாடு செய்திருந்தார்.  இதற்காக கடந்த 9 ம் தேதி மற்றும்  10 ம் தேதி என இரண்டு நாட்கள் இந்த கல்விக்கான சுற்றுலா நடந்தது,  இந்த பயணத்தின் முக்கிய அம்சமே நெல்லையில் இருந்து சென்னை செல்வதற்கு விமான பயணத்தை மாவட்ட ஆட்சியர் தேர்ந்தெடுத்தது தான். தான் கற்றுக் கொள்ளப் போகும் உயர்தொழில்நுட்ப படம் எந்த அளவுக்கு உயர்ந்தது அதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், மாணவ-மாணவிகள் இதுவரை படத்தில் மட்டுமே பார்த்திருந்த விமானத்தில் அவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல தனது சொந்த நிதியை பயன்படுத்தியுள்ளார் ஆட்சியர் விஷ்ணு. இத்திட்டத்தில் உள்ள துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் பிரபு ரஞ்சித்எடிசன், மற்றும் சியாமளா பாய் இந்த இரண்டு ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை பத்திரமாக விமானத்தில் அழைத்துச் சென்றனர்,




9 ஆம் தேதி காலையில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானம் மூலம் 21 மாணவ, மாணவியரும் முதன்முறையாக விமான பயணமாக சென்னை சென்றனர், சென்னையில் உள்ள ஐஐடி இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கு சென்று ஒவ்வொரு துறையாக பார்வையிட்டு துறை மாணவ, மாணவியர்கள், அங்குள்ள பேராசிரியர்கள் உடன் கலந்துரையாடினர். மேலும் அங்கு உள்ள பல்வேறு வகையான ஆய்வுக்கூடங்களை நேரடியாக பார்த்து வியந்தனர், மாணவ-மாணவிகள். இது மிகப்பெரிய ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்,




இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கம் சென்று பல்வேறு அறிவியல் தொழில் நுட்பங்கள் குறித்து நேரில் கண்டு உணர்ந்துள்ளனர்.  இதனை அடுத்து மிக முக்கியமான சந்திப்பாக தமிழக அரசின் "இல்லம் தேடி கல்வி'' திட்டத்தின் இயக்குனராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி இளம்பகவத் அவர்களை நேரில் சந்தித்து உரையாடி உள்ளனர். இளம்பகவத் அவர்களும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உரையாடி உள்ளார், பின்னர் சென்னை அண்ணா நூலகம் சென்று பல்வேறு புத்தகங்களை தேடிப்படித்தனர். இதனை தொடர்ந்து 10 ஆம் தேதி சென்னையில் இருந்து அனந்தபுரி செல்லும் ரயில் மூலம் 11 ஆம் தேதி காலை நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைந்தனர், இந்த பயணம் தங்களுக்கு தொழில் நுட்ப திறன்களையும், கல்வி சார்ந்த திறன்களையும் வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவியாக இருந்ததாக இதற்கு வழிகாட்டிய மாவட்ட ஆட்சியருக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்தனர்,


JEE நுழைவுத் தேர்வு பயிற்சிக்கு பல லட்சங்கள் செலவாகும் நிலையில் இலவசமாக மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பயிற்சி குறிப்பாக இலவச விமான பயணம், IIT பேராசிரியர்கள் உடன் கலந்துரையாடல் போன்றவை மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதில் எவ்வித  மாற்றுக் கருத்தும் இல்லை,




தற்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியரான விஷ்ணு, சேரன்மகாதேவி கோட்டத்தில் சார் ஆட்சியராக இந்திய ஆட்சிப் பணியைத் தொடங்கியவர். இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் சிறப்பு அலுவலராகவும், சென்னை மாநகர குடிநீர் வடிகால் வாரியத்தில் செயல் இயக்குநராகவும் பணியாற்றியவர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராகவும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநராகவும் பணியாற்றி, தமிழ்நாட்டில் வேலையில்லா இளைஞர்களை வேலைக்கு தகுதிவாய்ந்தவர்களாக மாற்றும் மிக முக்கியமான பணியினை மேற்கொண்டார், குழந்தைகள் மற்றும் மாணவர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்ட இவர் பல்வேறு விருதுகளையும் வாங்கி உள்ளார்,  இவரின் இந்த முயற்சி மற்ற மாணவர்களை  ஊக்கப்படுத்தும் ஒரு முயற்சியாக  இருந்தாலும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை முன் நோக்கி அழைத்து செல்லும் இது போன்ற செயலால் அனைவரின் பாராட்டையும், அன்பையும் வென்று வருவது குறிப்பிடத்தக்கது.