தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சிந்தாமணி, இங்கு வசித்து வருபவர் மாடத்தி, இவருக்கு இந்து பிரியா என்ற 19 வயது மகள் உள்ளார். மாடத்தியின் கணவர் கணேசன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தனது மகளை பீடி தொழில் செய்து படிக்க வைத்து வருகிறார்.  இந்து பிரியா  புளியங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை முதலாமாண்டு (B.Com) பயின்று வருகிறார்.. 




இந்நிலையில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்தன்று  இந்து பிரியாவின் உடன் பயிலும் மாணவி கல்லூரிக்கு செல்ஃபோன் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.  கல்லூரியில் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லாத நிலையில் ஆசிரியருக்கு தெரியாமல் செல்ஃபோன் பயன்படுத்தியது ஆசிரியருக்கு தெரிய வந்து உள்ளது. இது குறித்து தகவலறிந்த கல்லூரி ஆசிரியர்கள் இந்து பிரியாவை கண்டித்து மன்னிப்பு கடிதம் எழுதி தர வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்றிரவு தனது தாயாரிடம் கல்லூரியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து மனவேதனையுடன் கூறியுள்ளார்.


இந்நிலையில் இன்று காலையில் மாடத்தி வெளியில் சென்ற நேரம் பார்த்து இந்து பிரியா வீட்டினுள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். பின்னர் மாடத்தி வந்து பார்த்தபோது பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து உள்ளார்.. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இந்து பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




மேலும் இந்து பிரியா தற்கொலை செய்வதற்கு முன் தன் கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் கல்லூரி ஆசிரியர்களான முத்துமணி, வளர்மதி ஆகிய இருவரும் கல்லூரியை விட்டு போகவேண்டும் என்றும் தான் ஒரு தவறும் செய்யவில்லை என்றும், இனி வரும் காலங்களில் கல்லூரிக்கு பயில வரும் மாணவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் எனவும் எழுதி உள்ளார். மேலும் செல்ஃபோன் கொண்டு வந்த மாணவியை கண்டிக்காமல் என்னை வகுப்பறையில் அனைத்து மாணவர்கள் முன்பும் திட்டி விட்டனர். செய்யாத தப்பை ஒத்துக்கொள்ள சொல்கின்றனர்.  மிகவும் கஷ்டமாக  உள்ளது, நீ வளர்த்த பொண்ண மேனர்ஸ் இல்லன்னு சொல்லிடாங்க அம்மா என உருக்கமாக எழுதி இருந்தார்.


இதனையடுத்து  கடிதத்தை கைப்பற்றிய மாணவியின் உறவினர்கள் அதனை புளியங்குடி காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர்.  இதனையடுத்து கல்லூரி வளாகத்திற்கு சென்ற காவல்துறையினர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்கள் இன்று கல்லூரிக்கு வரவில்லை என்று கூறப்படும் நிலையில் காவல்துறையினர் கல்லூரியில் பிற ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது