நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி - அம்பிகா தம்பதியினர். இவர்களது மகன் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பட்டியலின வகுப்பை சேர்ந்த சின்னத்துரையை அப்பள்ளியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சிலர் அவர்களது புத்தக பையை சுமக்க வைப்பதும், கையில் இருந்த காசைப் பிடுங்கி மிரட்டுவதும், தாங்கள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டும் எனவும், சாதி ரீதியாக இழிவுபடுத்தி, பை சுமக்க கட்டாயப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் சின்னத்துரை பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.


பின் பெற்றோர் சின்னத்துரையை ஆசிரியரிடம் சொல்லி விட்டு விட்டு வந்துள்ளனர். அதன் பின் நடந்ததை சின்னத்துரை ஆசிரியரிடம் கூறியுள்ளார். ஆசிரியரும் குறிப்பிட்ட அந்த மாணவர்களை கண்டித்து அனுப்பியதாக  தெரிகிறது. இதனால் சின்னத்துரை மீது ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று முன் தினம் இரவு வீடு புகுந்து அவரை சரமாரியாக அரிவாளால் தாக்கி உள்ளனர். அதனை தடுக்கச்சென்ற சின்னதுரையின் தங்கைக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சின்னதுரையுடன் படிக்கும் 4 மாணவர்கள் மற்றும் இடைநின்ற 2 மாணவர்கள் என 6 பேரை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.. 


”ஜாதி, ரீதியான மோதல்கள் நடைபெற்ற பள்ளிகள் கண்டறியப்பட்டு காவல்துறை மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு குழந்தைகளுக்கான மனநல ஆலோசகர்கள் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜாதி, ரீதியிலான மோதல்கள் பள்ளிகளில் ஏற்படுவதை தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. சாதிய ரீதியிலான அடையாளங்களை பள்ளிகளில் பயன்படுத்துவது தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே போல நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மீது ஆயுதம் கொண்டு தாக்கிய விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனவும்  நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். 


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே போல முக்கூடல் அருகே பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கிடையே சாதியக் கயிறு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் செல்வசூர்யா என்ற மாணவனை சக மாணவர்கள் கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அதேபோல பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் சட்டையின்றி ஒரு மாணவரை சக மாணவர்கள் ஓட விட்டு தாக்கும் காட்சி அரங்கேறியது. அதே பேருந்து நிறுத்தத்தில் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவிகளும் ஒருவரை ஒருவர் முடியை பிடித்து இழுத்து தாக்கும் சம்பவம் நடைபெற்றது. அதிக கல்வி நிறுவனங்களை கொண்ட தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் மாணவர்களின் மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில் அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியையும், அச்சத்தையும் பெற்றோர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. அதோடு நெல்லை மாவட்டத்தில் குற்றச் செயல்கள் மீண்டும் தலை தூக்கி வருவதாக பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


குறிப்பாக கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஏற்படும் மோதல்களை தடுக்க மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண