நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியர். அவரது மகன் சின்னத்துரை (17). பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் சந்திராசெல்வி (14) ஒன்பதாம் வகுப்பும், வள்ளியூரில் உள்ள கண்கார்டியா அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பட்டியல் இன வகுப்பை சேர்ந்த சின்னத்துரக்கு, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஜாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் அளித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.  


இதனை அடுத்து சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் பள்ளி நிர்வாகம் புதன் கிழமை பெற்றோரிடம் தொடர்பு கொண்டு சின்னத்துரையை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.


அதனை தொடர்ந்து பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பள்ளியில் தன்னை சிலர் அடிப்பதாக நடந்ததை கூறியுள்ளார். பின்னர் சின்னத்துரையிடம் அந்த மாணவர்கள் பள்ளி முடிந்து பின்பு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு சுமார் 10.30 மணிக்கு வீட்டில் இருந்த சின்னத்துரையை ஒரு கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அப்போது அங்கு இருந்த சந்திராசெல்வி அதனை தடுத்துள்ளார். அப்போது அவருக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


இதுகுறித்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக சம்பவத்திற்கு சம்பவ இடத்திற்கு வரவில்லை என கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்னத்துரையின் தாத்தா முறை உறவினர் கிருஷ்ணன் என்பவர் திடீரென சாலையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்த சிலர் இரு சக்கர வாகனத்தின் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் சிறிது நேரத்தில் உயிரிழந்தார் . இச்சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்  நேற்று மதியம் கிருஷ்ணனின் உடலை நாங்குநேரி வள்ளியூர் மெயின் ரோட்டில் வைத்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த நாங்குநேரி தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் போலீஸ் டி.எஸ்.பி. ராஜூ சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கிருஷ்ணனின் உடலை எடுத்து சென்றனர். 


தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சின்னத்துரையுடன் படித்து வந்த 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் இரண்டு சிறார் உட்பட 6 பேரை கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். அதில் ஒரு சிறுவன் நாங்குநேரி திமுக ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணுவின் உடன் பிறந்த சகோதரியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.