நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக அனல்காற்று வீச வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கார்த்திக்கேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்தியில்,


பொதுமக்கள் பகல் நேரத்தில் பயணம் செய்ய நேரிட்டால் குடிதண்ணீர் எடுத்து செல்வதுடன், கண்ணாடி மற்றும் காலணி அணிந்து  குடையுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும். வீட்டிலேயே தயாரித்த உப்பு சக்கரை கரைசல், நீர்மோர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை அருந்த வேண்டும்.  உடலின் வெப்பம் அதிகரித்து நீர்சத்து குறைவினால் பல விதமான நோய்கள் ஏற்பட  வாய்ப்புள்ளது. எனவே உடலின் நீர்சத்து குறையாமல் பராமரித்திட உடலின் நீரிழப்பிற்கேற்ப அதிக அளவு குடிநீர் பருக வேண்டும். பருவகாலத்திற்கேற்ற பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயில் நேரங்களில் வாகனங்களில் குழந்தைகளை தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக்கூடாது.


வெளியில் விளையாட செல்லும் குழந்தைகளை முறையாக கண்காணிக்க வேண்டும். அதிக வெயில் நேரங்களில் குழந்தைகளை வெளியே அனுப்புவதை தவிர்க்க வேண்டும். தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தால் வெப்பத்தை தணிக்க ஈரமான துணியினால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும். மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். முதியவர்கள் போதிய இடை வேளையில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வீடுகளில் தனியாக வசித்து வரும் முதியவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசர உதவிக்கு அருகாமையில் செல்போன்/தொலைபேசி உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். தேர்தல் கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளின் போது பார்வையாளார்களாக கலந்து கொள்ளும் அனைவருக்கும் போதுமான நிழல் வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்.


தேர்தல் பரப்புரை பணிகளில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் மற்றும் அவருடன் செல்வோர் வெயிலிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் வரிசையில் நிற்பதற்கு மற்றும் காத்திருப்பதற்கு தேவையான நிழற்கூடாரங்கள் அமைத்திட உள்ளாட்சி துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். அதோடு நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக அனல்காற்று வீச வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.