நெல்லை மாவட்டம் திருப்பணி கரிசல் குளத்தை சேர்ந்த சந்தியா என்ற 18 வயது இளம் பெண் அவர் பணி செய்யும் பேன்சி ஸ்டோர் கடையின் குடோனில் வைத்து 17 வயதுடைய இளம் சிறாரால் காதல் விவகாரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இளம் சிறாரை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த நிலையில் திருப்பணிகரிசல்குளம் ஊர் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறை தரப்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் வருவாய்துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் முன் வரவில்லை எனக் கூறி திருப்பணி கரிசில் குளத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுமார் 5 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து நெல்லை பேட்டை சேரன்மகாதேவி சாலையில் அமர்ந்து நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சரவணக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு பேட்டை சேரன்மகாதேவி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பேருந்துகள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது.
தொடர்ந்து நெல்லை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஆதி திராவிட நலத்துறை துணை ஆட்சியர் பெனட் ஆசீர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அரசு வேலை வழங்குவதற்கு அரசிற்கு பரிந்துரை செய்யவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதற்கட்ட நிதியை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் அரசு சார்பில் மூன்று சென்ட் இடம் வழங்கி அதில் வீடு கட்டவும் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர்களில் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். ஆனால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் ஒரு கோடி நிவாரணம் வழங்க வேண்டும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஒரு ஏக்கர் நிலம் அரசு சார்பில் கொடுக்க வேண்டும். அரசு வேலைக்கான ஒப்புதல் கடிதத்தை அதிகாரிகள் வழங்க வேண்டும், கைது செய்யப்பட்ட இளம் சிறாருக்கு உடல் தகுதி மற்றும் மனோநிலை பரிசோதனையை உடனடியாக மேற்கொண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண் குழந்தைகள் பணி செய்யும் நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதிகாரிகள் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவை அறிவிப்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து மூன்று மணி நேரம் நடந்த சாலை போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று 3 வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஊருக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கைது செய்வதற்கு முன்னர் அந்த சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பிளேடால் தனது கழுத்தையும் அந்த சிறுவன் அறுக்க முயற்சி செய்துள்ளான். போலீசாரை கண்டு ஓடும் போது சிறுவனை போலீசார் பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனின் உடலில் வேறு எங்கும் காயம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அந்த சிறுவனுடன் நடந்த சம்பவம் குறித்து கலந்துரையாடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த சிறுவனிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறியும் போது காவல்துறையினரிடம் என்னை தூக்கிலிடுங்கள் பலமுறை அவளிடம் பேசி பார்த்து விட்டேன் எந்த பலனும் இல்லை. அவள் இல்லாத உலகத்தில் நான் வாழ மாட்டேன் என சொல்லும் காட்சிகளும் அதில் பதிவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் அந்த சிறுவனுடன் காக்கி உடையில் காவலர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.