ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கடைகளுக்கு வைப்பு தொகை மற்றும் வாடகை தொகை பன்மடங்கு உயர்த்தி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதை கண்டித்து பாளையங்கோட்டை வியாபாரிகள் சங்கத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகராட்சியில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் 56 கடைகள் இயங்கி வந்த நிலையில் 30 கடைகள் கட்டப்பட்டு பேருந்து நிலைய பணிகள் பெரும் பகுதி நிறைவு பெற்று திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்தித்தாள்களில் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கடைகளை ஏலம் விடும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் சதுர அடிக்கு 200 ரூபாய் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டும், வைப்புத் தொகையாக 20 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடைகளை ஏலம் எடுக்க முன் வரும் நபர்கள் வைப்புத் தொகையாக 10 லட்சம் கட்டவும் அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாளையங்கோட்டையில் இயங்கும் தனியார் கட்டடங்களில் இருக்கும் கடைகளுக்கு சதுரடி ரூபாய் 55 என்று வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்தவர்கள் சதுரடி ஒன்றிற்கு ரூபாய் 15 வாடகையாக கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் புதிய கட்டண நிர்ணயம் தங்களுக்கு வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல் எனவும், ஏற்கனவே கடை வைத்திருந்த 60 கடைக்காரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் வழங்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. ஆனால் எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் தன்னிச்சையாகவும் ஒருதலை பட்சமாகவும் மாநகராட்சி நிர்வாகம் நடந்து கொள்வதாக கூறி பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கடைகளுக்கான ஏலத்தை நிறுத்தி வைக்க வலியுறுத்தி வியாபாரிகள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக வந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என கைக்குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்த நிலையில் தற்காலிகமாக அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.