நெல்லை மாவட்டம் காவல் கிணறு விலக்கு பகுதியில் அமுத்சுரபி என்ற சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு துறை சங்கம் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் பணகுடி, காவல்கிணறு உட்பட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களது சேமிப்பு கணக்கை துவங்கி இருந்தனர். குறிப்பாக சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சிறு சிறு கடைகள், நிறுவனங்கள் என அங்கு பணிபுரியும் உரிமையாளர்கள் முதல் ஊழியர்கள் வரை தினமும் தனக்கு கிடைக்கும் ஒரு சிறு தொகையை அந்த நிறுவனத்தில் சேமிப்பாக செலுத்தி வந்தனர். தினமும் 200 ரூபாய் முதல் தன்னால் முடிந்த தொகை என செலுத்தி வந்ததோடு அந்த தொகையை சேமிப்பு புத்தகத்தில் வரவு வைத்தும் கொடுத்து உள்ளனர். குறைந்தது 100 நாள் என சேமிப்பை செலுத்திய பின்னர் அந்த தொகையை ஒரு சிறு வட்டியும் அந்த நிறுவனம் சேமிப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப செலுத்தும்.  கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தை நம்பி பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் தினசரி சேமிப்பு கணக்கை இந்நிறுவனத்தில் தொடங்கினர்.



மேலும் ஒரு சிலர் ஒரு லட்சம், லட்சம் என சேமிப்பை அந்த  நிறுவனத்திலேயே வைத்து பின்னர் அதனை பெற்று வந்தனர். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ராஜா என்பவர் தினமும் நேரடியாக சென்று வாடிக்கையாளார்களிடம் வசூல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அந்த நபர் வசூல் செய்ய வராமல் இருந்துள்ளார்.  இதனால் சேமிப்பு கணக்கை துவக்கிய பலரும் அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு உள்ளனர். ஆனால் முறையான எந்த தகவலும் அளிக்காமல் இருந்துள்ளனர்.  நேரில் சென்ற பலரும் நிறுவனம் பூட்டி இருந்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துள்ளனர்.  இந்த நிலையில் தான் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக  நிறுவனம் பூட்டி இருப்பதோடு அதனை மூடி விட்டு அதனை துவக்கியவர்கள் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் லட்ச கணக்கில் பணத்தை சேமிப்பாக செலுத்தி ஏமாற்றம் அடைந்ததும் தெரியவந்துள்ளது.




இது குறித்து ஏமாற்றப்பட்ட நபர் மணி என்பவர் கூறும் பொழுது, நான் பணகுடியில் ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வருகின்றேன். எனக்கு கிடைக்கும் வருமானத்தை கொண்டு தினமும் 200 ரூபாய் வரை செலுத்தி வந்தேன். கடந்த 4 ஆண்டுகளாக நான் மட்டுமின்றி எனது கடையில் பணிபுரிந்து வரும் 4 பேர் என செலுத்தி அந்த தொகையை பெற்று வந்த நிலையில் தற்போது செலுத்திய தொகை 20 ஆயிரத்தை வாங்கும் சூழலில் அந்த நிறுவனம் மூடப்பட்டு அவர்கள் தலைமறைவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. என்னைப்போல் பலர் லட்சக்கணக்கில் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளோம் என்று தெரிவித்தார்.




அதே போல அந்த நிறுவனத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த ராஜசேகர் என்பவர் கூறும் பொழுது, நான் கடந்த 5 வருடமாக சிறு சேமிப்பு வைத்துள்ளேன். கடந்த 5 மாதமாக யாரும் பணம் வாங்க வரவில்லை, இதுகுறித்து போன் செய்து கேட்டாலும் யாரும் உரிய பதில் அளிக்கவில்லை. என்னை போன்று இந்த பகுதியை சுற்றி உள்ள 50 க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் இதில் பணம் கட்டி வந்துள்ளார்கள். லட்சக்கணக்கில் பணத்தை சேமிப்பாளர்களிடம் திரும்ப கொடுக்கும் சூழலில் தலைமறைவாகியிருப்பது மிகுந்த அச்சத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதோடு அனைவரும் செலுத்திய  சேமிப்பு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.  சிறு சிறு கடைகள் வைத்து பிழைப்பு நடத்தி வரும் மக்களிடம் சேமிப்பு என்ற பெயரில் மோசடி செய்திருப்பது சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.