தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான நகரம் கோவில்பட்டி. தீப்பெட்டி, மில், கடலைமிட்டாய் தயாரிப்பு மற்றும் விவசாயம் என தொழில் சார்ந்த நகரம். இதனால் நாளுக்குநாள் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கோவில்பட்டி நகரை நோக்கி வருவதால் மக்கள் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.




நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் கோவில்பட்டி நகரில் மத்தியில் அண்ணா பஸ் நிலையம் செயல்பட்டு வந்தாலும், நகராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் 3.97 ஏக்கர் பரப்பளவில் 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த கூடுதல் பஸ் நிலையம் கடந்த 2007ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.




அப்போது தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த தற்பொழுதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் திறந்து வைத்தார். கூடுதல் பஸ் நிலையத்தில் பஸ் இயக்கப்பட்ட சில மாதங்களில் நிறுத்தப்பட்டது. வழக்கம் போல அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தான் செயல்பட்டு வருகிறது. கூடுதல் பஸ் நிலையம் செயல்பட நீதிமன்றத்தில் வழக்கு உள்ளிட்ட காரணங்களினால் பஸ் நிலையம் செயல்படமால் இருந்தது. இடையில் அண்ணா பஸ் நிலையம் பராமரிப்பு காரணமாக சுமார் 20 மாதங்கள் கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் பின்னர் கூடுதல் பஸ் நிலையம் கண்டுகொள்ளப்படவில்லை. 




15 ஆண்டுகளாக வெறும் காட்சி பொருளாக காட்சியளித்து வருவது மட்டுமின்றி தற்பொழுது திறந்த வெளி மதுபானக்கூடமாக மாறியுள்ளது. கூடுதல் பஸ் நிலையம் முழுவதும் எந்த பகுதிக்கு சென்றாலும் மதுபான பாட்டில்களை எளிதில் பார்க்க முடியும். மேலும் பஸ் நிலையத்தில் ஆங்கங்கே சுவர்களும், மேற்கூரைகளும் பெயர்ந்து விழுந்து கொண்டு இருக்கிறது. மேற்கூரைகள் மரங்கள் வளர்வருவதற்கும், பறவைகள் கூடுகள் கட்டுவதற்கும் பயன்பட்டு வருகிறது.




தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் இருந்தாலும், அந்த வழியாக செல்லக்கூடிய அரசு, தனியார் பஸ்கள் எதுவும் கூடுதல் பஸ் நிலையத்திற்கு வருவதில்லை, பஸ் நிலையத்திற்கு வெளியே இறக்கி விட்டு செல்கின்றனர். சில அரசு விரைவு பஸ்கள், ஆம்னி பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் மையப்பகுதியில் இறக்கி விட்டு செல்லுவதால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் பயணிகள் தங்களது உடமைகளுடன் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணித்து தான் கூடுதல் பஸ் நிலையத்திற்கு வரவேண்டியுள்ளது.




சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என முக்கிய நகரங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள், பைபாஸ் ரைடர்கள், தனியார் ஆம்னி பஸ்கள் எல்லாம் கோவில்பட்டி நகருக்குள்ள வராமல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லுவதால் பயணிகள் கூடுதல் பஸ் நிலையம் எதிரே வெயிலிலும், மழையிலும் வெகு நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையத்திற்கு சர்வீஸ் பஸ்கள் இயக்கப்படாத காரணத்தினால் பயணிகள் ஆட்டோவை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அது மட்டுமின்றி ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் நடந்தே ஊருக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அது மட்டுமின்றி கூடுதல் பஸ் நிலையத்தில் கடைகள் எடுத்த வியாபாரிகள் 14 ஆண்டுகளாக பஸ் நிலையம் என்றவாது ஒரு செயல்பட்டு விடாதா என்று காத்திருக்கும் நிலையும் உள்ளது. கொரோனா ஊரடங்கின் போது கோவில்பட்டி தினசரி சந்தை கூடுதல் பஸ் நிலையத்தில் செயல்பட்டது என்பது குறிப்படத்தக்கது.




கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கலாம் அந்த அளவுக்கு நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அதிக செலவு செய்து அமைக்கப்பட்ட கூடுதல் பஸ் நிலையத்தினை செயல்படுத்த வேண்டும், விரைவு பஸ்கள், ஆம்னி பஸ்கள் மட்டும் கூடுதல் பஸ் நிலையம் வழியாக செல்கிறது. அந்த பஸ்கள் பஸ் நிலையம் உள்ளே செல்லமால் வெளியில் பயணிகளை இறக்கி விட்டு செல்லுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. கூடுதல் பஸ் நிலையம் சமூக விரோதிகளின் கூடரமாக மாறி உள்ளது. போலீசாரும் அப்பகுதியில் ரோந்து பணிக்கு செல்வதில்லை என்பதால் இரவு நேரங்களில்  வரும் மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் பஸ் நிலையத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.




கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு கடந்த 2007ம் ஆண்டு கூடுதல் பஸ் நிலையம் திறக்கப்பட்டது. தற்பொழுதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் இதனை திறந்து வைத்தார். ஆனால் கடந்த 14 ஆண்டுகளில் 20 மாதங்கள் தான் செயல்பட்டு உள்ளது.மதுரை,நெல்லை, சென்னை, பாண்டிசேரி உள்ளிட்ட ஊர்களுக்கு மக்கள் இங்கு வந்து தான் செல்கின்றனர். மு.க.ஸ்டாலின் திறந்த காரணத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு இதனை செயல்படுத்த முயற்சி செய்யவில்லை, ஆனால் தற்பொழுது முதல்வராக வந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்




சில வியாபாரிகள் நலன், அரசியல் என பல காரணங்களாக மக்கள் வரிப்பணத்தில் கட்டபட்ட கூடுதல் பஸ் நிலையம் சமூக விரோதிகள் கூடராமாக உள்ளது.நகரில் உள்ளே அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களையும், கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களையும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, 24 மணி நேரம், அண்ணா பஸ் நிலையம் மற்றும் கூடுதல் பஸ் நிலையம் இடையே சர்வீஸ் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுத்தால் நகரில் போக்குவரத்து நெருக்கடி முற்றிலுமாக குறைவது மட்டுமின்றி பயணிகளும் எளிதாக பயணிக்க முடியும் என்கின்றனர் பொது மக்கள்.




இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டுக்கு வருமென தெரிவித்து இருந்தார். ஆனாலும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை என்கின்றனர் கோவில்பட்டி மக்கள்.