தேசிய பேரிடர் மீட்புப்படை வருவதில் தாமதம்:
தேசிய பேரிடர் மீட்பு படை 16 பட்டாலியன்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்திய துணை ராணுவப்படை அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் தேசிய பேரிடர் மீட்பு படையின் நான்காவது பட்டாலியன் தமிழகத்தின் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் அமைந்துள்ளது. இந்த பட்டாலியனை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தமிழகம் ,கேரளா ,அந்தமான் &நிக்கோபார், லட்சத்தீவு, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். அரக்கோணம் நான்காவது பட்டாலியன் தேசிய பேரிடர் மீட்பு படையின் பிராந்திய குழுக்கள் தமிழகத்தில் சென்னை கேரளாவில் திருச்சூர் அந்தமான் நிக்கோபார் லட்சத்தீவு பகுதிகளுக்கு அந்தமானிலும் செயல்பட்டு வருகிறது. தென் தமிழக மற்றும் அதனை ஒட்டி உள்ள கேரள பகுதிகளில் ஏற்படும் பேரிடர்களின் போது தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் வருவதில் பல நேரங்களில் தாமதம் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.
தென்தமிழகத்தில் அமையவுள்ளது பேரிடர் மீட்புப்படை பிராந்திய மையம்:
இந்த நிலையில் தென் தமிழகத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் பிராந்திய மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த சூழலில் நெல்லை மாவட்டத்தில் அதற்கான இடம் தேர்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சியரிடம் கூறப்பட்ட சூழலில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அமையும் தேசிய பேரிடர் மீட்பு படையின் பிராந்திய அலுவலகத்தில் 30 பேர் கொண்ட வீரர்கள் 24 மணி நேர சுழற்சிப்பணியில் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பேரிடர் மீட்பு பணிக்கான அதிக உபகரணங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் தவிர்த்து இரசாயன, கதிரியக்க மற்றும் உயிரியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையிலான அதிநவீன உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது.
தற்காலிக கட்டிடம் ஏற்பாடு, ராதாபுரத்தில் தங்கும் விடுதி:
செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நெல்லை வரும் தேசிய மீட்பு படை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு பிராந்திய மையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளனர். முதற்கட்டமாக தற்காலிக கட்டிடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் பிராந்திய மையம் செயல்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் உள்ள மாணவர் தங்கும் விடுதி மீட்பு படை வீரர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.