மாநில உரிமைக்காக முதலில் குரல் கொடுப்பவர் நமது முதல்வர் தான்:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயர் இல்லம் வளாகத்தில் அமைந்துள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று கலந்துரையாடினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, ”காபி வித் அமைச்சர் என்ற வகையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்து முதல் மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டத்தை தேர்வு செய்து மாணவர்களிடையே உரையாற்றும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. பொது தேர்வில் மாணவ, மாணவிகளுக்கு பயம் இருக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பல்வேறு விதத்தில் மாநில உரிமைகளை காப்பதற்கு முதலமைச்சர் குரல் எழுப்பி வருகிறார். ஒட்டுமொத்த இந்தியாவில் மாநில வரிசையில் முதலில் குரல் கொடுப்பது தமிழக முதல்வர் தான்.
கல்வி நிதியை தர அழுத்தம் தருகிறது மத்திய அரசு:
அங்கும் இங்குமா கை வைத்து கடைசியில் கல்வித்துறையில் கை வைக்க துவங்கி விட்டார்கள். இது வேதனைக்குரியதாக உள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை 2 முறை சந்தித்த போது, 4 வது தவணை நிலுவை தொகையை வழங்காமல் மத்திய அரசு உள்ளது. இப்போது கேட்க சென்றால் தேசிய கல்வி கொள்கையில் சேர்ந்தால் மட்டுமே தருவதாக கூறியுள்ளார்கள்.. மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். எங்களது துறை சார்ந்த அதிகாரிகள் அவர்களின் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். எப்படியிருந்தாலும் கல்வி என்று பார்க்கும் பொழுது அரசியல் பார்க்காமல், கட்சிக்கு நாங்கள் பணம் கேட்கவில்லை, திமுக மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியையும், எல்லா சமுதாயத்தையும் சார்ந்த பிள்ளைகளின் எதிர்காலத்தில் கல்வியில் கை வைக்கக்கூடிய நிலை இருக்கிறது. எனவே தேசிய கல்வி கொள்கையில் சேர்ந்தால் தான் பணத்தை தருவேன் என்ற அழுத்தத்தை தராதீர்கள். கடைசி இரண்டு வருடத்தில் எந்த கண்டிசனும் இன்றி கொடுத்த பணத்தை இந்த முறை மட்டும் தேசிய கல்வி கொள்கையில் சேர்ந்தால் மட்டுமே தருவதாக கூறுவது ஒட்டுமொத்தமாக மாணவர்களுக்கு செய்யும் வஞ்சனையாக உள்ளது” என்றார்.
மாநில அரசுக்கு ஒன்றிய அரசால் நிதி நெருக்கடி:
தொடர்ந்து பேசிய அவர், ”2152 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. நான்காவது தவணையில் இருந்து நிறுத்தியுள்ளார்கள்.
தேசிய கல்வி கொள்கையை காரணத்தை காட்டி நிதி தருவதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். கல்வி என்று சொல்லும் போது நாம் முன்னோக்கி சென்று கொண்டிருப்பது தெரியும். இப்படிப்பட்ட மாநிலத்திற்கு கேட்காமலேயே அவர்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் சரியாக இருக்கும். 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரோ திட்டத்தை மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார். ஆனால் அதற்கான நிதியை தற்போது மாநில அரசு செய்து வருகிறது. இப்படி ஒவ்வொரு திட்டத்திலும் கை வைக்கும் பொழுது மாநில அரசுக்கு நிதி நெருக்கடியை மத்திய அரசு உருவாக்கி தருகின்றனர். இந்த நிதி நெருக்கடியில் இருந்து எப்படி வெளியில் வர முடியும் என்று தமிழக முதல்வர் தன்னுடைய நிர்வாகத் திறமையால் கண்டிப்பாக செய்வார் என்று நம்புகிறேன்.
தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமம்:
மொழி கொள்கையில் மும்மொழி கொள்கையை புகுத்த நினைக்கிறார்கள். ஆனால் அந்த மொழியின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் நிதியில் பாரபட்சம் இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதும், மற்ற மொழிக்கு குறைவான நிதி ஒதுக்குவதிலிருந்தே அவர்களது பாகுபாடு தெரிகிறது. மொழி கொள்கை என்று வரும் பொழுது ஏற்கனவே நான் சொன்னது போல தமிழகத்தை பொறுத்தவரை மொழியில் கை வைப்பது என்பது தேன்கூட்டில் கை வைப்பதற்கு சமம்” என்றார்.