வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி 2025 ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை பகுப்பாய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் ஆகியோரிடம் இருந்து வாக்குச்சாவடிகள் தொடர்பாக கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறுவதற்கு வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியலை நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சி தலைவருமான கார்த்திகேயன் வெளியிட அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்தல்:
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறும் பொழுது, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 13,93,199 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 6,80,765 பேரும், பெண் வாக்காளர்கள் 7,12,303 பேரும், இதர வாக்களர்கள் 131 உள்ளனர். மொத்தமாக 1486 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளும், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும், ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 307 வாக்குச்சாவடிகளும் அமைந்துள்ளது என தெரிவித்தார். இதில் 1500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல், பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மாற்றுதல், வாக்குச்சாவடிகளின் அமைவிடம் மாற்றம், கட்டிட மாற்றம் செய்தல் மற்றும் வாக்குச்சாவடிகளின் பெயர் திருத்தம் ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆட்சேபனை இருந்தால் கடிதம் அளிக்கலாம்:
1500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள் நெல்லை சட்டமன்ற தொகுதியில் மட்டும் இரண்டு அமைந்துள்ளது. அதனையும் பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். எனவே அரசியல் கட்சிகள், பொதுமக்கள் தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் எவருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனில் எழுத்துப்பூர்வமாக கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் அல்லது நெல்லை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவரிடம் 05.09.24 தேதிக்குள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.