கட்சி நிர்வாகிகள் மறியலில் இருந்தபோது கண்டு கொள்ளாமல்  பா.ஜ.க மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் சென்றதாக பாஜகவினர் இடையே அதிருப்தி எழுந்திருக்கிறது :

 

 மேலும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு குழுவாக சென்று பாரதிய ஜனதா கட்சியினர் அஞ்சலி செலுத்தியது நெல்லை மாவட்ட பாஜகவினர் இரு குழுவாக செயல்பட்டு வருவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

 நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. 

இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 1999- ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி கூலி உயர்வு கேட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அப்போது காவல்துறை நடத்திய தடியடியில் தப்பிக்க முயற்சித்து தாமிரபரணி ஆற்றை கடக்க முயற்சித்த 17 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களின் நினைவு தினம் ஆண்டு தோறும் ஜூலை 23 ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் 22-வது நினைவுதினம்  இன்று கடைப்பிடிக்கப்பட்டது.               

 திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தன் ஆதரவாளர்கள் உடன் சென்று  தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்தவர்களுக்கு பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.



 

இதனிடையே  பாரதிய ஜனதா கட்சிக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என கூறி மாவட்ட பாஜக தலைவர் மகாராஜன் தலைமையில்   கொக்கிரகுளம் பேருந்து நிறுத்தம் அருகே   மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டு கொள்ளாமல் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது காரில் புறப்பட்டு சென்றார்.

 

இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் மஹாராஜன் தலைமையில் பாஜக வினர் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன் பின்பு நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று தனியாக அஞ்சலி செலுத்தினார்.

 

மேலும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பு அனைவரையும் அரவணைத்து சென்றதாகவும், தற்போது நெல்லை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்பு சொந்த கட்சியுள்ளே பலரை அவர் மதிப்பதில்லை என்றும் கட்சியினர் புலம்புகின்றனர். மேலும் நயினார் மாநில அளவிலான பதிவியில் இருப்பதால், உள்ளூர் நிர்வாகிகளை அவர் மதிப்பதில்லை என்றும், கட்சியினர் போராட்டத்தைக் கூட கண்டுகொள்ளாமல் செல்வதா என்றும் கொதித்தனர். நெல்லையில் பாஜக எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக அக்கட்சியினர் அதிருப்தி தெரிவித்து வருவதால், இந்த விவகாரம் தலைமையிடம் புகாராக செல்லலாம் என கூறப்படுகிறது.