கொற்கையில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணியில் நான்கு அடுக்கு கொண்ட திரவப் பொருட்கள் வடிகட்டும் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 



                                             தமிழக தொல்லியல்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தொல்லியல் அகழாய்வு பணிகள், கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. கொற்கையில், கடந்த 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் தமிழக தொல்லியல்துறை சார்பில் ஏற்கெனவே அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளது. அந்த அகழாய்வுப் பணிதான், தமிழக தொல்லியல்துறை உருவான பின்னர், செய்த முதல் அகழாய்வுப் பணியாகும். சுமார் 2,800 ஆண்டுகள் பழமையானது கொற்கை நகரம் என்பது அந்த அகழாய்வில் உறுதியானது. இங்கு துறைமுகம் இருந்தாகவும், இங்கிருந்து கடல்வழி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடந்ததாகவும், ’கொற்கை’ பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் விளங்கியது எனவும் அறிவிக்கப்பட்டது. இங்கு 52 ஆண்டுகள் கழித்து, தற்போது அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது. அகழாய்வு இயக்குனர் முனைவர் தங்கத்துரை தலைமையில், அகழாய்வாளர்கள் ஆசைத்தம்பி, காளீஸ்வரன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

               

                                                             இந்த அகழாய்வுப் பணிக்காக, கொற்கைப் பகுதியில் 17 ஆய்வுக்குழிகள் தோண்டப்பட்டுள்ளன.  இந்த அகழாய்வில் ஏற்கெனவே சுமார் 2,800 ஆண்டுகள் பழமையான கட்டிடம், அறுக்கப்பட்ட நிலையில் சங்குகள், அறுக்கப்பட்ட சங்குகளை பட்டை தீட்டப் பயன்படுத்தப்பட்ட பல வடிகங்கள், சங்குகள், சங்கினால் செய்யப்பட்ட வளையல் துண்டுகள், இரும்பு உருக்குத் துண்டுகள், கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், கீறல்கள் மற்றும் பல்வேறு குறியீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



                                இந்த நிலையில், நான்கு அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்களை வடிகட்டும் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே குழியில் உருகிய கண்ணாடி மணிகள், இரும்புப் பொருள்கள் கடல் சிப்பிகள் கடல் உயிரினத்தின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆதிச்சநல்லூர், சிவகளை அகழாய்வைப் போலவே ‘கொற்கை அகழாய்வு’ம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களை இங்கேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.