தூத்துக்குடி மாவட்டம் சிப்பிக்குளம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரெக்சன், இவர் மிதவை கூண்டுகளில் மீன் வளர்ப்பு தொழிலில் முன்னோடியாக மாறியுள்ளார். சிப்பிக்குளம் கடல் பகுதியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு சோதனை அடிப்படையில் மிதவை கூண்டில் மீன் வளர்க்கும் முறையை அறிமுகம் செய்தது.
இங்குள்ள கடல் சூழ்நிலை, நீரின்தன்மை, அலையின் தன்மை, ஆழம் போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் விஞ்ஞானிகள் சுமார் ஓராண்டு காலம் தீவிர ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் சிப்பிக்குளம் கடல் பகுதி மிதவை கூண்டுகளில் மீன்வளர்ப்புக்கு ஏற்ற இடம் என கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து முதலில் சோதனை அடிப்படையில் 2015-ஆம் ஆண்டு மிதவை கூண்டுகளில் சிங்கி இறால் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது ரெக்சன் 2 கூண்டுகளில் சிங்கி இறால் வளர்த்தார்.
முதல்முறையிலேயே கூண்டில் மீன்வளர்க்கும் திட்டம் நல்ல பலனை தந்ததால் ரெக்சன் இந்த தொழிலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். இன்று, தமிழகத்தில் கூண்டுகளில் மீன்களை வளர்க்கும் முன்னோடி மீனவராக அவர் மாறியிருக்கிறார். தற்போது சிப்பிகுளம் கடல் பகுதியில் 4 கூண்டுகளில் சிங்கி இறால் (Lobster fish), கடல் விரால் (Cobia fish), கொடுவா (Seabass fish) ஆகிய மீன்களை வளர்த்து வருகிறார்.
காலை நேரத்தில் கூண்டுகளில் உள்ள மீன்களுக்கு இரை போட்டுக் கொண்டிருந்த ரெக்சனிடம் கேட்டபோது, மீனவர் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் மீன்பிடித் தொழிலில் சிறு வயதில் இருந்தே ஆர்வம் உண்டு. சின்ன வயதில் கடற்கரையில் விலை போகாமல் வீசி எறியப்படும் சிறிய சிங்கி இறால் குஞ்சுகளை உயிரோடு சேகரித்து அதனை கடலில் வலைகட்டி சில காலம் வளர்த்து விற்பனை செய்வோம். அந்த அனுபவத்தில் தான் மிதவை கூண்டில் மீன் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினேன்.
கூண்டுகளில் மீன் வளர்ப்பது தொடர்பாக மத்திய கடல் மீன்வள ஆராயச்சி நிலையத்தில் சில நாட்கள் பயிற்சி பெற்றுள்ளேன். அதுபோல கொடுவா மீன் வளர்ப்பு குறித்து சீர்காழியில் உள்ள ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெற்றேன். முதலில் உயர் அழுத்த பாலி எத்திலின் மற்றும் பிளாஸ்டிக் கூண்டுகளில் தான் மீன்களை வளர்த்தோம். அதற்கு அதிக செலவு ஆவதுடன், குறைந்த எண்ணிக்கையிலேயே மீன்கள் வளர்க்க முடியும். இதையடுத்து இரும்பு மிதவை கூண்டுகளை மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் தற்போது உருவாக்கியுள்ளது. இந்த கூண்டுகள் காலியான பிளாஸ்டிக் டிரம்கள் மூலம் கடலில் மிதக்கவிடப்படுகின்றன.அலையில் கூண்டுகள் அடித்து செல்லாமல் இருக்க இருபுறங்களிலும் நங்கூரங்கள் போட்டு நிறுத்துவோம். இந்த கூண்டுகளில் சிங்கி இறால் மற்றும் கடல் விராலை பொறுத்தவரை 700 மீன்கள் வரை வளர்க்கலாம். அதுபோல 1000 கொடுவா மீன்களை வளர்க்கலாம்.இந்த மீன்களை 7-வது மாதத்தில் அறுவடை செய்யலாம். தினமும் காலை, மாலை என இருவேளை உணவு போட வேண்டும். மீன் ஏலக்கூடங்களில் கிடைக்கும் சாளை போன்ற சிறிய மீன்களை வாங்கி உணவாக போடுவோம்.
7 மாதங்களில் சிங்கி இறாலை பொறுத்தவரை 200 முதல் 300 கிராம் எடை வரை வளரும். இந்த மீன் 1 கிலோ வரை வளரும் தன்மை கொண்டது. ஆனால் ஏற்றுமதிக்கு ஏற்ற ரகம் 200 முதல் 300 கிராம் தான். எனவே, இந்த காலக்கட்டத்தில் தான் அறுவடை செய்வோம். சிங்கி இறால் சீசனை பொறுத்து கிலோ ரூ. 2000 வரை விலை போகும்.
கடல் வீரால் மீன்களை பொறுத்தவரை 7 மாதங்களில் 3 முதல் 5 கிலோ வரை எடை வரும். இது கிலோ ரூ. 300 முதல் ரூ. 350 வரை விலை போகும். கொடுவா மீன்கள் 1 கிலோ முதல் 2 கிலோ வரை வளரும். இது கிலோ ரூ. 300 முதல் ரூ. 400 வரை விலை போகும். இந்த மீன்கள் அனைத்தும் ஏற்றுமதிக்கே விற்பனை செய்யப்படுகின்றன.
சிங்கி இறால் குஞ்சுகளை பொறுத்தவரை மீன் இறங்குதளங்களில் விற்பனைக்கு போகாத 40 கிராம் முதல் 90 கிராம் எடையுள்ள குஞ்சுகளை மீனவர்களிடம் இருந்து வாங்கி வந்து வளர்ப்போம். கடல் விரால் மீன் குஞ்சுகளை பொறுத்தவரை திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி மையத்திலும், கொடுவா மீன் குஞ்சுகளை சீர்காழியில் உள்ள ராஜீவ் காந்தி நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி மையத்திலும் வாங்கலாம். தற்போது மீன் குஞ்சுகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் கொடுவா மீன் குஞ்சுகளை ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டினத்தில் வாங்கி வந்ததாக கூறும் இவர்,ஒரு கூண்டில் கொடுவா மீன்களும், 2 கூண்டுகளில் கடல் விரால் தாய் மீன்களும், 1 கூண்டில் சிங்கி இறால் மீன்களும் உள்ளன. தாய் விரால் மீன்களை பொறுத்துவரை மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் ஆராய்ச்சிக்காக கேட்டதை தொடர்ந்து வழங்கப்பட்டதாகவும் கூறுகிறார்.ஒவ்வொரு கூண்டிலும் தலா 8 மீன்கள் உள்ளன.
ஒரு கூண்டு வடிவமைக்க ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை செலவாகும். ஒரு கூண்டை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். 7 மாதங்கள் பொறுத்திருந்தால் தான் வருமானம் கிடைக்கும். ஒரு முறை வளர்த்தால் ஒரு கூண்டில் ரூ. 1 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். செலவு போக கணிசமான லாபம் கிடைக்கும். கடலில், அதன் சூழ்நிலையிலேயே மீன்கள் வளர்க்கப்படுவதால் நோய்கள் எதுவும் பெரிதாக பாதிப்பதில்லை.
தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளும் இந்த திட்டத்துக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள். மிதவை கூண்டுகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் தமிழக அரசு 100 சதவீத மானியத்தில் வழங்கி வருகிறது. சிப்பிகுளத்துக்கு முதலில் 5 கூண்டுகள் வழங்கப்பட்டன. மீனவர்களிடம் இருந்த ஆர்வத்தை தொடர்ந்து இந்த ஆண்டு 10 கூண்டுகளை 100 சதவீத மானியத்தில் அரசு வழங்கியது. ஆனால் தற்போது 40 சதவீத மானியத்தில் அரசு வழங்கி வருகிறது.
இயற்கை சீற்றம், பேரிடர், கடலில் மீன்வளம் குறைவு போன்ற காரணங்களால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மிதவை கூண்டுகளில் மீன்களை வளர்க்கும் முறை மீனவர்களுக்கு நிலைத்த, நீடித்த, பாதுகாப்பான வருமானம் தொழிலாக உருவெடுத்துள்ளது.
இது மாற்றுத் தொழில் அல்ல. மீனவர்கள் ரத்தத்தோடு ஊறிய மீன்பிடித் தொழில்தான். ஆனால், மாற்று வழிமுறையிலான மீன்பிடித் தொழில். 'தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்' என்பார்கள். இது மீனவர்களுக்கு தெரியாத தொழில் அல்ல. கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கூடுதல் வருமானத்துக்கு கூண்டுகளில் மீன்வளர்ப்பு தொழிலையும் சேர்த்து செய்யலாம். தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை மட்டும் இதற்கு செலவு செய்தால் போதும். கடலில் மீன் கிடைக்காத நேரத்தில் இந்த தொழில் கைகொடுக்கும் என்கிறார். அதே நேரத்தில் கடலின் நடுவே வளர்க்கப்படும் மீன்களுக்கு இரவு நேரங்களில் உணவு கொண்டு செல்வதில் பிரச்சினை உள்ளதாக கூறும் இவர், கடலில் அதிகரிக்கும் காற்று காரணமாக கூண்டின் அருகே நின்று கொண்டு உணவு அளிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து, மீன் வளர்ப்பு கூண்டுகளின் மேற்புறத்தில் சோலார் சக்தியுடன் இயங்கக்கூடிய சிறிய மோட்டார் உதவியுடன் மீன்களுக்கு தேவையான உணவினை வழங்க ஏற்பாடு செய்து உள்ளதாகவும், இதை நவீனப்படுத்தவும் முயற்சித்து வருவதாக கூறும் இவர், ரூ 400 மதிப்புள்ள மோட்டார் வாங்கி தானே செய்து உள்ளதாகவும் கூறுகிறார்.