பின்னனி என்ன ?

 

நெல்லை மாநகராட்சியில் ரூபாய் ஆயிரம் கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன . 

 

நெல்லை புதிய பஸ் நிலையம் சந்திப்பு பஸ் நிலையம் பஸ் நிலையங்கள் புதிய கட்டுமானங்கள் டவுன் மார்க்கெட் பொருட்காட்சி மைதானத்தில் வர்த்தக மையம் என பல்வேறு புதிய கட்டிடப் பணிகள் வேகம் எடுத்து வேலைகள் நடந்து வருகிறது.

 

 இந்நிலையில் நெல்லை மாநகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி முதன்மை செயல் அலுவலராக பணியாற்றிய நாராயணன் நாயர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டார்.



 

 நாராயண நாயரின் ராஜினாமா பின்னணியில் பல கோடி ரூபாய் மோசடி சம்பவம் அரங்கேறி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நெல்லை மாநகராட்சி ஆணையராக கடந்த மாதம் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி விஷ்ணு சந்திரன் நியமிக்கப்பட்டார்.

 

 இவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து சீர்மிகு நகர் திட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

 

 குறிப்பாக நாள்தோறும் காலை 7 மணி முதலே நகரின் பல்வேறு இடங்களில் தனி ஆளாக ஆய்வுக்கு சென்று திட்டப் பணிகளை முடுக்கி விட்டார். அதோடு திட்டம் தாமதமாவது ஏன் என்பது குறித்து சக அதிகாரிகளுடன் ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார்.



 

 அப்போது சீர்மிகு நகர் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல் மாநகராட்சி ஆணையருக்கு தெரியவரவே இதனை கூடுதல் கவனத்தோடு கண்காணிக்க ஆரம்பித்தார் என்று கூறப்படுகிறது.

 

 மேலும் இதற்கு சீர்மிகு நகர் திட்ட முதன்மை அதிகாரி நாராயணன் நாயர் தான் மூல காரணமாக செயல்பட்டதாகவும் தெரிகிறது .

 

குறிப்பாக நெல்லை பழையே பேருந்து நிலையம் சீரமைப்பு பணியின்போது பூமிக்கு அடியில் பல நூறு டன் ஆற்று மணல் கிடைத்தது. இதை முறைகேடாக மாநகராட்சி அதிகாரிகள் விற்பனை செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அப்போது நாராயண நாயர் தான் தலைமை செயல் அதிகாரியாக இருந்தார்.



 

 இதுபோன்ற சூழலில் உடனடியாக பணியில் இருந்து விலகும்படி நாராயண நாயரை ஆணையர் விஷ்ணு சந்திரன் கேட்டுக் கொண்டதாகவும் அதனால் தான் அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாகவும் ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.

 

 அதேபோல் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சமீபத்தில் நெல்லை மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்டார் . 

 

கே.என். நேரு நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வு செய்த பின் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்பு ஸ்மார்ட் சிட்டி சி.இ.ஓ. தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 இதுபோன்ற சூழ்நிலையில் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா செய்திருப்பது நெல்லை மக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.