சாயல்குடி அருகே தனது மனைவியின் உடன் பிறந்த தங்கை மகளான பள்ளி மாணவியை மிரட்டி  பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கி தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளியை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாரியூர் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன் (46 ). இவருடைய  மனைவியின் தங்கையும்  மற்றும் அவருடைய  கணவரும்  சில  வருடங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் அடுத்தடுத்து  இறந்துவிட்டனர்.




பெற்றோர்கள் இருவரும் இறந்த போனதால் யாருடைய  ஆதரவில்லாமல் அரவணைக்க யாருமின்றி நிர்கதியாக நின்ற   அந்த  சிறுமி தனது பெரியம்மாவான ரகுநாதனின் மனைவியின் பராமரிப்பில் இருந்துள்ளார். தாய், தந்தை இருவரையும் இழந்து நிற்கும் தனது தங்கையின் மகளை தனது  மகளாக நினைத்த அவர், பராமரித்து வளர்த்து வந்ததுடன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு  சிறுமியை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி  பயில  வைத்து வந்துள்ளார். ஆனால் அவருடைய கணவர் ரகுநாதன் அந்த சிறுமியை மகளாக பார்க்கவில்லையென்பது பின்னாளில்தான் தெரிய வந்துள்ளது.


இந்தநிலையில், கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக சிறுமி பெரியம்மாவின்  வீட்டில் வந்து தங்கியுள்ளார்.அதே போல திருச்செந்தூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்த ரகுநாதன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.


அனைவரும் ஒரே வீட்டில் இருந்த நிலையில் காமுகனின் குரூர புத்தி வேலை செய்யத்தொடங்கியது. தனது மனைவி  வேலைக்கு வெளியே செல்லும் நேரம் பார்த்து,  அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல்  சீண்டல்களில் ஈடுபட்டு வந்த ரகுநாதன் பின்னர் பாலியல் வன்புணர்வில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், பெற்றோரை இழந்து பெரியம்மா பெரியப்பாவே கதி என இருந்த அந்த 17 வயது  சிறுமி கயவன் பெரியப்பனின் கருவை தன் வயிற்றில் தாங்கும் நிலைக்கு ஆளானார்.




இதனால் மனம் நொந்து நடந்த சம்பவங்களை சிறுமி தனது பெரியம்மாவிடம் கூறவே, அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த  அவர் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காமுகன் ரகுநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரகுநாதனை தேடி அவரின் வீட்டிற்கு சென்றபோது விசயமறிந்த அவர் போலீசுக்கு தண்ணி காட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.


மேலும், தப்பியோடிய ரகுநாதனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் பலமுறை போலீசாரின் கண்ணில் சிக்காமல் டிமிக்கி கொடுத்துள்ளார்.




இதனை தொடர்ந்து,  சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடிய சாயல்குடி போலீசார்  ரகுநாதனின் செல்போன் சிக்னல் மூலம் அவர் தூத்துக்குடி பகுதியில் பதுங்கியிருக்கும் இருப்பிடத்தை கண்டறிந்தனர். இதனையடுத்து இரவோடு இரவாக தூத்துக்குடி விரைந்த காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் மறைந்திருந்த காமக்கொடூரன் ரகுநாதனை போலீசார் கொத்தாக அள்ளினர். தொடர்ந்து அங்கிருந்து ரகுநாதனை சாயல்குடி காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தந்தை ஸ்தானத்தில் இருந்து மகளாய் பார்க்க  வேண்டிய பெரியப்பாவே சிறுமியின் வாழ்க்கையை நாசமாக்கிய செயல்,  வேலியே பயிரை மேய்ந்தது என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துவிட்டது. எத்தனை உறவுகள் பூமியில் இருந்தாலும், பிள்ளைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பெற்றோருக்கிணையாக யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை இது போன்ற சம்பவங்கள் மூலம்  இந்த உலகம் அடிக்கடி உணர்த்துகிறது.