நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் ரயில் நிலையங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது. இதன் காரணமாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வழியாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும், வட மாநில எல்லை வரை உள்ள நகரங்களுக்கும் வாரம் முறை என்ற அடிப்படையிலும் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் நெல்லையிலிருந்து சென்னைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கக்கூடிய ரயில் நிலையமாக இருப்பதால் எப்போதும் பயணிகள் கூட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும்.
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய ரயில் நிலையத்தில் கழிப்பறை கூடங்கள் போதுமாக பராமரிக்கப்படவில்லை, எஸ்கலேட்டர் மற்றும் வயதானவர்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பான லிப்ட் போன்றவை பழுதாகி உள்ளது என பொதுமக்களின் புகார் வந்ததால் இன்று (நேற்று) ஆய்வு செய்ய வந்தேன் என திடீர் ஆய்வில் ஈடுபட்ட நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். தொடர்ந்து நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பழுதாகி நிற்கும் எஸ்கலேட்டர் மற்றும் ஒரு லிப்ட்களை ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிப்பறை பராமரிப்பின்றி கிடப்பதாக கூறி உடனடியாக மாற்றுத்திறனாளிகள் கழிப்பறையை திறந்து வைக்க கூறினார். ரயில் பயணிகளின் அடிப்படை தேவைகளை அவ்வப்போது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி. ராபர்ட் ப்ரூஸ் கூறும்போது, தென்பகுதிக்கு முக்கியமான ரயில் நிலையம் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம். ஆனால் அதில் பல குறைபாடுகள் இருப்பதாக பயணிகளிடமிருந்து புகார் வந்தது. குறிப்பாக ரயில் நிலையத்தில் உள்ள எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் போன்றவை செயல்படவில்லை என புகார் வந்தது. அதனை இன்று ஆய்வு செய்தோம்.
அதே போல கழிப்பறைகள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் இருப்பது குறித்தும் பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் இந்த ஆய்வு மேற்கொண்டோம். அதிலிருக்கும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த ரயில் நிலையம் மிகப்பெரிய வருமானத்தை ரயில்வே துறைக்கு ஈட்டித்தருகிறது. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை தனிக் கோட்டமாக அறிவிக்க கோரி பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்வோம். மேலும் இந்த பகுதியில் இருந்து பார்த்தால் சென்னைக்கோ, புதுடெல்லிக்கோ குறைந்த அளவிலேயே நெல்லையில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது. பகல் நேரத்தில் நெல்லையில் இருந்து சென்னைக்கு பாசஞ்சர் ரயில் இயக்க கோரியும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.