கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவ மழை காலங்களில் டெங்கு உள்ளிட்ட பல தரப்பட்ட தொற்று நோய் பரவும் சூழல் ஏற்படும், நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தென் மேற்கு பருவ மழை சீசன் துவங்கி உள்ளது. கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தி ஆவதை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. மேலும் கேரளாவில் இரண்டு பேர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் நாகர்கோவில் மாநகரில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதார துறை அதிகாரிகளுடன் மேயர் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். அதில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் 300 கும் மேற்பட்ட சுகாதார துறை அதிகாரிகள் கொண்டு வீடுவீடாக கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.



 

 

இதுகுறித்து நாகர்கோவில் நகர மேயர் மகேஷ் கூறுகையில், கேரளாவில் குரங்கமை நோய் இரண்டு பேருக்கு வந்துள்ளது தினசரி வேலைக்காக நாள்தோறும் நாகர்கோவில் மாநகரில் இருந்து ஏராளமான மக்கள் கேரளா செல்வது வழக்கம். அப்படி கேரளா செல்லும் மக்கள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் தொற்று பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் பருவ மழை காரணமாக டெங்கு உள்ளிட்ட நோய் பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

 

குறிப்பாக மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகளில் தண்ணீர் தொட்டி மற்றும் பாத்திரங்களில் குப்பைகளில் தேங்கி நிற்கும் நீரில் கொசு புழுக்கள் உள்ளனவா என்பது குறித்து கண்காணித்து கொசு புழு உற்பத்தியை தடுக்க மருந்துகள் அடித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.