கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் 48 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து ஈத்தாமொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே காளிச்சன்தோப்பு காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி சுபா (44) மற்றும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சுபா வீட்டை பூட்டிவிட்டு கடந்த 14 ஆம் தேதி நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து நேற்று இரவு அவரது வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுபா வீட்டினுள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 48 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இதுகுறித்து ஈத்தாமொழி காவல் நிலையத்தில் சுபா புகாரளித்தார். புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

 



 

பின்னர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளை நடந்த வீடு முழுவதும் தடயங்கள் மற்றும் கைரேகை பதிவுகள் சேகரிகப்பட்டது. மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள குடியிருப்பு வாசிகளிடமும் கொள்ளை குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளையும் கைப்பற்றிய தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நெருக்கமாக வீடுகள் இருக்கும் இந்த காலணியில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



 

அண்மை காலமாக குமரி மாவட்டத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது கடந்த 30 நாட்களில் மட்டும் சுமார் 50 கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளை என்பது நடந்து உள்ளது. பெரும்பாலான கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகள் யார் என்பதை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.