நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழக அரசால் மழை வெள்ள பாதிப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை வழங்கியது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வரும் நிவாரண தொகை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் அமைச்சருக்கு விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சுவாமிநாதன் கூறும் பொழுது, நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி தொடங்கிய நிலையில் 2 நாளில் 3 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18- ந்தேதி ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கினால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்று பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ள சேதங்களை பார்வையிட நெல்லை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக பாதிப்புள்ள இடங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், குறைந்த பாதிப்புள்ள பகுதிகளுக்கு 1000 ரூபாயும் நிவரணம் வழங்கப்படும் என அறிவித்தார். இதனை அடுத்து  மாவட்டத்தில் கடுமையாக பெருமழையால்  பாதிப்படைந்துள்ள தாமிரபரணி நதிக்கரை வட்டங்களான அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய 4 வட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், அதிக பாதிப்படைந்த வருவாய் கிராமங்கள் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகையாக தலா ரூபாய் 6000/- வீதமும்,  மாவட்டத்தில் உள்ள ஏனைய கிராமங்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகையாக தலா ரூபாய் 1000/- வீதமும் வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு நிவாரணத்தொகை வழங்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.


மாவட்டத்தில் 840 நியாய விலை கடைகள் மூலம் 5 லட்சத்து 4,357 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் குறிப்பாக 3 லட்சத்து 40 ஆயிரத்து 552 அட்டைதாரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், 1 லட்சத்து 63 ஆயிரத்து 705 பேருக்கு 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது. இதில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 379 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 6000மும் 1 லட்சத்து, 4 ஆயிரத்து 25 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரமும் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு நிவாரண நிதி வழங்குவதற்காக 220 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் நிவாரண நிதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமையான இன்றும் விடுமுறை என்ற போதிலும் பணியாளர்கள் மூலம் நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளைய தினம் புத்தாண்டு என்ற காரணத்தினால் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும்.


எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து விதமான குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை கட்டாயம் வழங்கப்படும். குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை இல்லாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அவர்களுக்கும் தமிழக அரசின் மூலம் நிவாரணம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும். ரேஷன் கடைகளில் நிவாரணம் பெறும் போது வைக்கப்படும் கைரேகை பதிவாகாத முதியவர்கள் உடல்நலம் குன்றியவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கும் முறையாக அரசின் நிவாரணம் சென்று சேரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.