தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து பெருமாள். இவர் அருகில் உள்ள கருங்குளம் பகுதியில் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் நெல்லை ரெட்டியார்பட்டி மலை அருகே சிவந்திபட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வெட்டிப் படுகொலை:
அப்போது அங்கு வந்த கும்பல் முத்து பெருமாளை வழிமறித்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்து பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவர் அணிந்திருந்த தலைக்கவசம் முழுவதும் இரத்தமாக ஒருபுறமும், அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஒருபுறமும் கிடந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து வந்த நெல்லை பெருமாள்புரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அங்கிருந்து சிறிது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முன்னீர்பள்ளம் என்ற பகுதியில் கையில் இரத்தம் படித்த அரிவாளுடன் சுற்றி திரிந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். அப்போது அவர்களை விரட்டி பிடித்த போது 2 பேர் பிடிபட்டுள்ளனர். ஒருவர் தப்பியோடியுள்ளார். தப்பியோடிய நபர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரணம் என்ன?
குறிப்பாக முத்து பெருமாள் எதற்காக கொலை செய்யப்பட்டார். ஏதேனும் முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அரிவாளுடன் சுற்றி திரிந்து பிடிபட்டவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடியில் மக்கள் பலர் வீடுகளை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கும் சூழலில் இது போன்ற கொலை சம்பவங்களால் மேலும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். அதிகாலையில் வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.