கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ. கலையரங்கில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறும் தீர்வுதளம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத் துறைக்கென ரூ.165 கோடியும், பழுதடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி சாலைகளை சீரமைப்பதற்கென ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட திருக்கோவில்களை சீரமைப்பதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலையில் தற்போது அந்த குப்பைகளை படிப்படியாக அகற்றிவருவதோடு, பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல்அமீன், செயலாளர் கார்த்திகேயன் முதல் மனுவை கொடுத்தனர். மனுவில், மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையை முழுமையாக தார் போட்டு சீரமைத்து அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும் என கூறியிருந்தனர். நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர்.




 

குமரி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

 

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2022-202-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு தொழிற்கல்வி பட்டப்படிப்புகளான பி.இ., பி.டெக், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.எட். மேலும் இதுபோன்ற படிப்புகள் பயிலும் படை அலுவலர் தகுதிக்குகீழ் உள்ள முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறு வதற்கான விண்ணப் பங்கள் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



 

இக்கல்வி உதவித்தொகை பெற குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இக்கல்வி உதவித்தொகை பெற தகுதி உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவைகள் முதற்கட்டமாக இணையதளத்தில் தங்களது பெயரை பதிவு செய்து கல்வி சலுகை பெற இணையதளத்தில் பி.எம்.எஸ்.எஸ். என்ற தலைப்பின் கீழ் சான்றுகளுக்கான படிவங்களை பதிவிறக்கம் செய்து கல்வி நிலையம், வங்கி மற்றும் இவ்வலுவலகத்திலிருந்து உரிய சான்று பெற்று தேவையான ஆவணங்களுடன் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள வேண்டும். பின்னர் அதன் அசல் களை உடனடியாக (மூன்று நாட்களுக்குள்) நாகர்கோவில் கோட்டாரில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து சரிபார்த்து கொள்ள வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். தேர்வு செய்யப்படும் பெண் குழந்தைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.36 ஆயிரம், ஆண் குழந்தைகளுக்கு ரூ.30 ஆயிரம் கல்வி இறுதி ஆண்டுவரை தொடர்ச்சியாக வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை (தொலை பேசி எண்.04652-243515) தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.