இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு முழு வீச்சில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ் நாட்டில் மூன்றாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு அதிவேகமாக தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது.

 



 

தென்காசி மாவட்டத்தில் செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம, நகர மற்றும் நகராட்சி பகுதிகளில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் பொருட்டு அங்கன்வாடி, துணை சுகாதார நிலையங்கள், பள்ளி மற்றும் சமுதாய நலக்கூடம் என மொத்தம் 614 மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட வேண்டிய நபர்கள் உட்பட 70000 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தென்காசி மாவட்டத்திற்கான மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமிற்கான துவக்க விழா ஆலங்குளம் அரசு பள்ளியில் நடை பெற்றது. இந்த நிகழ்வை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். உடன் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர் ராஜ், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ், திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 



 

மேலும் 614 தடுப்பூசி முகாம்களில் திரளான மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கோவாக்ஸின் மற்றும் கோவி ஷீல்டு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர். இம்முகாமிற்கான பணிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள், அனைத்து துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் என ஆயிரகண்கானோர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முகாமில் 70000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் இம்முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொள்ள எடுத்துக்காட்டாக செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது. தென்காசி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 13 இலட்சத்துக்கும் 641 பேரில் கடந்த 10ம் தேதி நிலவரப்படி  5 லட்சத்து 68 ஆயிரத்து 722 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.